பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது.
நிகழ்வில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது ”பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களுக்கு வணக்கம். இந்தப் படத்தின் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீண்ட ஒன்று. 2022 பிப்ரவரி மாதத்திலேயே இந்தக் கதையின் ஒன் லைன் என்னிடம் கூறப்பட்டது. அப்போது இந்தப் படம் உருவாகப் போகிறது என்று ரசிகர்களுக்கும் தெரிந்திருந்தது.
அதற்குப் பிறகு பல தாமதங்கள் ஏற்பட்டது. பல முறை வெளியீட்டு தேதிகள் மாற்றப்பட்டது — கோடை, டிசம்பர், பிப்ரவரி என்று தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தோம்.
பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும். நம்பிக்கையும் கொஞ்சம் குறையும். அது படக்குழுவினரையும் பாதிக்கும். எனக்கும் அதே சந்தேகம் இருந்தது — “இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும்?” என்று. ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தது. மக்கள் கொடுத்த அன்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இந்த எல்லா தடைகளையும் தாண்டி, இப்படத்திற்கு கிடைத்த இந்த அன்புக்கு மக்களிடம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என் படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.
முக்கியமாக, இந்த தருணத்தில் மூன்று முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் —ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார், எடிட்டர் பிரதீப் ராகவன், இசையமைப்பாளர் அனிருத் சார். இந்த மூவர் இல்லாமல் இந்தப் படம் உருவாக முடியாது என்று நான் உண்மையாக நம்புகிறேன். அவர்கள் கொடுத்த காட்சியமைப்பு, இசை, எடிட்டிங் — இவை எல்லாமே இந்தப் படத்தை ஒரு தொழில்நுட்ப ரீதியாக வலுவான படமாக மாற்றியுள்ளது. படம் பார்த்த உடனே நான் இவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். பொதுவாக தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னணியில் இருப்பதால் அவர்களின் பங்களிப்பு வெளியில் அதிகமாக தெரியாமல் போகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக, முதல் நாளிலிருந்து இன்று வரை எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி.
இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது, ”இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர். அது வெளியானது தான் எனக்கு பெரிய வெற்றி. ஏன்னா, எப்போதுமே பெரிய கனவு காண்றது சுலபமில்லை. அதுக்காக கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வரணும். எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருந்திருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து, என்னை நான் சாலஞ்ச் பண்ணிக்கிட்டதுதான் இந்தப் படம்.
இந்தப் படத்தில் ஒரு ஃப்ரேம் கூட ஈஸியா எடுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் — காஸ்ட்யூம், செட், VFX, மேக்கப், டயலாக் — எல்லாமே சரியாக இருக்கணும். அப்போதுதான் இது நம்பிக்கைக்குரியதாக இருக்கும். படம் வெளியான பிறகு நிறைய நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. அதே சமயம் சிலர் “ஸ்லோவா இருக்கு”ன்னு சொன்னாங்க. ஆனா ஹை-கான்செப்ட் படம் என்றாலே, ஆரம்பத்தில் கொஞ்சம் விளக்கம் தேவைப்படும். அது போல தான் — விமானம் பறக்குமுன் சொல்லப்படும் விதிமுறைகள் மாதிரி. அதை நான் ஒரு constructive criticism-ஆ எடுத்துக்கிறேன். அது எனக்கும் சில விஷயங்களை புரிய வைத்தது.
இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனா வழக்கமான மெலோட்ராமா இல்லாமல், ஒரு புதிய அனுபவம் கொடுக்கணும் என்ற முயற்சி தான் இது. அந்த முயற்சி தியேட்டரில் கைதட்டலாக மாறும்போது கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாதது. ஒரு எழுத்தாளராக, இயக்குநராக நம்ம முயற்சி சிலருக்காவது வேலை செய்கிறது என்ற உணர்வு நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதற்காக ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி.
இந்தப் படம் நடக்க காரணம் பிரதீப் தான். ஆரம்பத்திலிருந்தே பட்ஜெட் சிக்கல்கள் இருந்தது. ஆனாலும் இந்தப் படம் உருவானது அவரால் தான். இன்றைக்கு நிறைய படங்கள் டிராப் ஆகுது லீக் ஆகுது, டைரக்டர்ஸ் நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வலியை ஒரு டைரக்டர்தான் உணர முடியும். அந்த இடத்தில், சமீபத்தில் லீக் பிரச்சனையை சந்தித்த H வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபம். அது ஒரு டைரக்டருக்கு மிகப்பெரிய வலி.
இந்தப் படத்தையும் நான் என்னால் முடிந்தவரை எந்த compromise-ம் இல்லாமல் எடுத்தேன். ஒரு தடவை தான் எடுக்க முடியும் — அதனால் முழுமையாக எடுத்தேன். பிரதீப் — ஒரு ஹீரோவாக மட்டும் இல்ல, ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞன். நேரம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு— எல்லாமே வேற லெவல்.
ஒரு swimming pool sequence-ல அவர் செய்த உழைப்பு மறக்க முடியாதது. மூச்சை பிடித்து நீண்ட நேரம் நடிப்பது ரொம்ப கஷ்டம். ஆனா அவர் முழு அர்ப்பணிப்புடன் செய்தார். அந்த மாதிரி பல நினைவுகள் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்துக்கு கிடைத்த ஓபனிங் — அது முழுக்க பிரதீப் மீது மக்கள் வைத்த நம்பிக்கை.
இந்தப் படம் நீண்ட காலம் ஓடும் என்று நான் நம்புகிறேன். சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், தியேட்டரில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ரசிப்பீர்கள். என்னோட வார்த்தையை நம்பலாம். இந்தப் படம் சீக்கிரம் 100 கோடி கிளப்பில் சேரும் — நான் நம்பிக்கையோடு சொல்கிறேன்.
கிருத்தி — இன்னும் சின்ன குழந்தை மாதிரி தான். அவங்க அம்மாவும் அதே மாதிரி. செட்டில் பல நேரங்களில் அவர்களை ஒரு குழந்தையை கவனிப்பது போலவே நாங்கள் பார்த்துக்கொண்டோம். சில சமயங்களில் சிறிய தவறுகள் நடந்தாலும், வேலை செய்யும் போது அவருடைய அர்ப்பணிப்பு மிக உயர்ந்தது. சிறப்பாக அந்த ஸ்விம்மிங் பூல் காட்சியில், வேறு இடங்களில் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகும், இரவெல்லாம் உழைத்து ஒரு நாளும் சோர்வு காட்டாமல் நடித்தார். மிகவும் இனிமையானவர், அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் பிடித்த அனுபவம்.
ரவி வர்மன் அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமும் மிகவும் அழகாக இருக்கும். மலேசியாவில் சாதாரண சாலையில் எடுத்த காட்சிகளுக்கே ஒரு மாயம் சேர்த்தது ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார் அவர்களின் திறமை. அவர் எளிமையாகவே அசாதாரண காட்சிகளை உருவாக்கும் தனித்திறமை கொண்டவர்.
இந்தப் படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் மிகுந்த உழைப்பை கொடுத்துள்ளனர். கௌரி — அவருடன் வேலை செய்வது மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். எதிர்காலத்தை கற்பனை செய்து, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடை வடிவமைப்புகளை ஏற்றுக்கொண்டு, நடித்தார்.
இந்தப் படம் உருவாக முதன்மை காரணம் தயாரிப்பாளர் லலித் சார். அவர் முன் வந்து “இந்தப் படம் தொடங்கலாம்” என்று சொல்லவில்லை என்றால், இந்தப் படம் நடந்திருக்காது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி கூற வேண்டும்.
எடிட்டர் பிரதீப் ராகவன் — இந்தப் படம் பல சிக்கல்களுடன் இருந்தது. எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன. அந்த நேரங்களில் அவர் உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ந்து, பல பதிப்புகளை உருவாக்கி, சரியான வடிவத்தை கண்டுபிடிக்க உதவினார். ஒரு படத்துக்கு அவர் பத்து படங்களுக்கு சமமான உழைப்பை கொடுத்தார். முத்துராஜ் சார் அவர்களின் தயாரிப்பு வடிவமைப்பு, உடை வடிவமைப்பு, கணினி காட்சி விளைவுகள் — இவை எல்லாமே இந்தப் படத்திற்கு பெரிய பலம். மாங்கோ போஸ்ட் நிறுவனம் இந்தப் படத்தில் கணினி காட்சி பணிகளில் மிகுந்த உதவி செய்தது. ஆரம்பத்தில் சிறிய வேலை என்று தொடங்கியதும், பிறகு முழு மனதுடன் இந்தப் படத்திற்குள் இறங்கி, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்கள். அதற்காக அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறுவேன்.
எஸ்.ஜே.சூர்யா சார் — 2018 முதல் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரையே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் பிஸியானவர் என்றாலும், எங்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கி இந்தப் படத்திற்கு முழுமையாக ஆதரவு அளித்தார்.
சீமான் அண்ணன் — மிகவும் நல்ல மனம் கொண்டவர். அரசியலில் பெரியவர் என்றாலும், செட்டில் மிகவும் எளிமையாக, நட்பாக பழகினார். அவருடன் வேலை செய்த ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தப் படத்தில் உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு குழு, பலர் — எல்லாருடைய உழைப்பாலும் தான் இந்தப் படம் உருவானது. அந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். இன்னும் ஒரு முறை தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் படத்தின் மூலம் நான் கற்பனை செய்த ஒரு உலகத்தை திரையில் கொண்டு வர முடிந்தது. அந்தக் கற்பனையை ரசிகர்கள் ரசித்து கைதட்டும்போது, அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தாலும், இன்று மக்கள் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய வெற்றி. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

