நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பரபரப்பாக இயங்குபவர் சேலம் வேங்கை அய்யனார்.
இவர் விஜய் நடித்த ‘சர்க்கார்’ படத்தில் தேனீ விவசாய வேட்பாளராக நடித்தவர். மாஸ்டர் மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன் ஆகியோருடன் ‘கரா’ படத்தில் தாதா வேடத்தில் நடித்துள்ளார்.
அம்மா ராஜசேகர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தல’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் ‘வெட்டு’ என்ற பெயரில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் காட்டுவாசி சமூகத்தின் தலைவராக நடித்துள்ளார். விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் ‘நொடிக்கு நொடி’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
தயாரிப்பாளராக தனது ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் தயாரிப்பில் ‘என்டர் தி டிராகன்’ என்ற படத்தை தமிழில் எடுத்து வருகிறார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்கிறார்கள். பார்த்திபன்.ஜெ இயக்குகிறார். கதாநாயகனாக வெற்றி நடிக்கிறார். இந்த படத்தில் வேங்கை அய்யனார் அரசியல்வாதியாக நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் உள்ளது.
அதைத் தொடர்ந்து ‘லில்லி புட்’ என்ற பெயரில் புதிய படத்தை பிரமாண்டமான பொருட்செலவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக தயாரிக்கவுள்ளார். லில்லி புட் என்பது ஒரு வகையான மிருகம். .இதை வீட்டில் வைத்து வணங்கினால், நினைத்ததை சாதிக்கும் சக்தி வரும். அந்த லில்லி புட்டை இந்தியாவின் மிக முக்கிய அரசியல்வாதி ஒருவர் வைத்துள்ளதாக நம்பப்படுகிறது. அதை மையமாக வைத்து படத்தை இயக்குநர் அவதார் இயக்கவுள்ளார். படத்தில் முன்னணி கதாநாயகன் ஒருவர் நடிக்கவிருக்கிறார். படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.