கமர்ஷியலாகவும் இருக்க வேண்டும்;கருத்தும் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்படும் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே வரவேற்பு உண்டு. அதை மனதில் வைத்து உருவாகியுள்ள படம் இது.
தமிழ்நாட்டில் வாழ்கிற அந்த பையனுக்கு வயது பதினேழு. வயதளவில் வாலிபத்தின் துவக்கத்திலிருந்தாலும் அவனது தோற்றத்தில் குழந்தைத்தனம் எட்டிப் பார்க்கிறது. அவன் உத்தரப் பிரதேசத்துக்கு போகிறான். கோழிக் கறி வெட்டும் வேலையில் சேர்கிறான். அந்த வேலையில் அவன் விரும்பி சேரவில்லை. சேர வேண்டிய கட்டாயம். ஆரம்பத்தில் அந்த வேலையை கற்றுக் கொல்லும்போது ரத்தம் கொட்டுவதைப் பார்த்துப் பதறுகிறான். ‘கோழி பாவமில்லையா?’ என வேலை போட்டுக் கொடுத்த முதலாளியிடம் பாவமாக கேட்கிறான். அப்படிப்பட்டவன் ஒரு கட்டத்தில், அங்கிருக்கும் மதவாதிகளை கோழிகளின் கழுத்தை வெட்டுவது போல் வெட்டி வீசுகிறான்.
அந்த வாலிபனுக்கு அந்த துணிச்சல் எப்படி வந்தது? அந்த சம்பவங்களை நடத்த அவனைத் தூண்டியது எது? அவன் உத்தரபிரதேசத்துக்கு போன காரணம் என்ன? கறி வெட்டும் வேலையில் சேர வேண்டிய கட்டாயம் என்ன? அவன் ஏதோவொரு நோக்கத்தோடுதான் அந்த மாநிலத்துக்கு போயிருப்பான். அந்த நோக்கம் நிறைவேறியதா?
எல்லாவற்றுக்கும் இயக்குநர் அம்மா ராஜசேகர் அமைத்திருக்கும் திரைக்கதையில் பதில் கிடைக்கிறது. அதெல்லாம் கமர்சியல் சினிமாவுக்கான கச்சிதமான கட்டமைப்பில் இருக்கிறது.
இயக்குநர் ஹீரோவை வெளியில் தேடவில்லை. தன் மகன் ராகின் ராஜையே களமிறக்கியிருக்கிறார். அவரும் அதற்கு தகுதியானவராக இருக்கிறார். அம்மா மீதான பாசம், அம்மாவுடன் சேர்ந்து வாழாத அப்பா மீதான நேசம், அப்பாவின் குடும்பத்திடம் அராஜகமாக நடந்துகொண்ட மதவெறியர்களை தூண்டு துண்டாய் கூறுபோடுவதில் வெறித்தனம், காதலில் அதற்கேற்ற உடல்மொழி என ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார்.
அவரது காதலியாக அங்கிதா. ஜோடிப் பொருத்தம் அசத்துகிறது. அலட்டிக்கொள்ளாத நடிப்பால் அவரும் அசத்துகிறார்.
சினிமா ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசையில் கல்யாணமான மறுதினமே கணவரை பிரிகிற, மகன் தோளுக்கு மேல் வளர்கிறவரை அந்த குற்றவுணர்ச்சியோடு வாழ்கிற வித்தியாசமான கேரக்டரில் சுந்தரா டிராவல்ஸ் ராதாவின் நடிப்பு சுவாரஸ்யம்.
விஜி சந்திரசேகர் கொலை வெறி பிடித்தவராக டெரர் முகம் காட்டும் காட்சியும் படத்தில் உண்டு.
ஹீரோவின் அப்பாவாக, அவரது இரண்டாவது மனைவியாக, மத வெறியர்களாக வருகிறவர்கள் ஏற்ற பாத்திரங்களில் மிகச்சரியாய் பொருந்திப் போகிறார்கள்.
படத்தின் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் உடல் முழுக்க கறுப்பு நிறத்தைப் பூசிக்கொண்டு அடையாளம் மாறி காட்டுப் பன்றி வேட்டையராக அட்டனன்ஸ் போட்டிருக்கிறார்.
பின்னணி இசையை புயலின் தன்மையோடும், பாடல்களுக்கான இசையை பூக்களின் மென்மையோடும் தந்திருக்கிறார்.
ரம்மியமான காட்சி, ரத்தம் தெறிக்கும் காட்சி… எதை எந்த கோணத்தில் படமாக்கினால் படத்தின் தரம் உயரும் என யோசித்து கேமராவை கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே நாயுடு.
சண்டைக் காட்சிகளில் ஸ்டண்ட் சில்வாவின் உழைப்பு தெரிகிறது.
சந்தர்ப்ப சூழ்நிலைகள் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தலா என்ற பெயரில் தெலுங்கில் உருவான, இந்த படைப்பின் தமிழ் டப்பிங் நல்ல தரம். தாராளமாய் பார்க்கலாம் ஒரு தரம்!
Rating 3.5 / 5