சாதிவெறி தாதாக்களிடம் சிக்கிச் சீரழியும் சாமானிய மனிதர்களின் கதையாக ‘வேதா.’
இளம்பெண் வேதாவுக்கு குத்துச் சண்டை வீராங்கனையாக வேண்டும் என்பது லட்சியம். கீழ் சாதிக் குடும்பத்தில் பிறந்த காரணத்தால் அவளுக்கு குத்துச் சண்டை பயிற்சி மறுக்கப்படுவதோடு இன்னும் சில பிரச்சனைகளும் அவளை துரத்துகிறது. அதையெல்லாம் அவள் சமாளிக்க ராணுவ வீரர் ஒருவர் அவளுடன் கை கோர்க்கிறார். இருவருமாக சேர்ந்து என்னவெல்லாம் கஷ்ட நஷ்டங்களைச் சந்தித்தார்கள் என்பதும் நிறைவில் என்ன சாதித்தார்கள் என்பதுமே திரைக்கதை… இயக்கம் நிகில் அத்வானி
வேதாவாக நடித்திருக்கிற ஷர்வாரி, குத்துச் சண்டை பயிற்சியை ஜன்னல் வழியாக பார்த்தே கற்றுக் கொள்வது, தேவையான நேரத்தில் அதை பயன்படுத்தி எதிராளிகளைப் பந்தாடுவது என கேரக்டருக்கு பொருத்தமான பங்களிப்பைத் தந்திருக்கிறார். சாதி வெறியர்களின் கொடுமைகளுக்கு ஆளாகும் தருணங்களில் கலங்க வைக்கிறார்.
ராணுவ வீரன், நேர்மையானவன் என பின்னப்பட்ட கதாபாத்திரத்தில் ஜான் ஆபிரகாம். முறுக்கேறிய உடற்கட்டோடு சண்டைக் காட்சிகளில் அவரது வெறித்தனம் படத்துக்கு பலம்.
ஜான் அபிரகாமின் மனைவியாக, தோற்றப்பொலிவில் பல வருடங்களாக பேத்தியாகவே இருக்கிற தமன்னா ‘பாட்டி’யா. அப்படி வந்து இப்படி போய்விடுகிற ரோல்தான். ஆனாலும் மிகச்சில நிமிடங்களில் உணர்வுபூர்வமாக செயல்பட்டு மனதில் நிரம்புகிறார்.
பேச்சில் வசீகரமும் நடவடிக்கைகளில் கொடூரமும் என அபிஷேக் பானர்ஜி போட்டிருக்கும் அட்டடன்ஸ் அட்டகாசம்.
அமல் மாலிக் இசையில் பாடல்களை ஒருமுறை ரசித்துக் கடக்கலாம். படத்தின் காட்சிகள் பலவற்றை அதிரடியான சண்டைக் காட்சிகளால் ஆக்கிரமித்திருக்க அதற்கேற்றபடி கார்த்திக் ஷாவின் பின்னணி இசை கதைக்களத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
பாலிவுட் நடிகர், நடிகைகளின் கதாபாத்திரத்தின் தன்மையுணர்ந்த நடிப்பில் நம்மூர் பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் வகையறா படத்தைப் பார்க்க விரும்பினால் ‘வேதா’வை தாராளமாக பார்க்கலாம்.