‘வல்லவனை மட்டுமல்ல; உலகம் நல்லவனையும் ஒரு நாள் நல்ல நிலைக்கு உயர்த்தும்’ என்ற கருத்தைச் சுமந்து வந்திருக்கும் படம்.
பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகயிருக்கிற ஐந்துபேர் பன வசதிகளோடு உற்சாகமாக வாழ்ந்து கொண்டிருக்க, நேர்மையாக இருக்கிற ஒருவர் வாழ்வில் அனைத்தையும் இழந்து வேதனையோடு நாட்களைக் கடத்துகிறார்.
எந்தவித தொடர்புமில்லாத அந்த ஆறுபேருக்குள்ளும் ஒரு கட்டத்தில் தொடர்பு ஏற்பட, அதனால் அவர்களின் வாழ்க்கையில் சிலபல மாற்றங்கள் உருவாகிறது. தொடர்பு எப்படி ஏற்படுகிறது என்பதும், உருவாகும் மாற்றம் எப்படிப்பட்டது என்பதையும் சுறுசுறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையோடும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விநாயக் துரை.
தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் என ஆறு பேரும் ஏற்கனவே சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் பார்த்து பழகிய முகங்கள்… இந்த படத்தின் பிரதான பாத்திரங்களில் மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார்கள். பாராட்டும்படி நடித்திருக்கிறார்கள்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிற ராஜேஷ் பாலச்சந்திரன் வித்தியாசமான சிரிப்புடன் கூடுதலாக கவனம் ஈர்க்கிறார்.
கதைக்களத்தின் தன்மையுணர்ந்த சகிஷ்னா சேவியரின் பின்னணி இசையும், கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவும் காட்சிகளை தரம் உயர்த்தியிருக்கின்றன.
திரைக்கதை ‘ஹைபர் லிங்க்’கில் பயணிக்கும்போது எடிட்டருக்கு வேலை அதிகம். அந்த அதிகப்படி வேலையை அழகாகச் செய்திருக்கிறார் அஜய்.
அடுத்து இதுதான் நடக்கும் என யூகிக்க முடிகிற சில காட்சிகள் படத்தின் குறையாக இருந்தாலும், திரைக்கதையின் சுவாரஸ்யங்கள் அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விடுகின்றன.
‘கெட்டவன் மட்டுமே நன்றாக வாழமுடியும்’ என்றாகிவிட்ட காலகட்டத்தில், ‘நல்லவனுக்கும் நல்லது நடக்கும்’ என்ற நம்பிக்கையை விதைத்திருப்பதற்காக வல்லவன் வகுத்ததடா படக்குழுவுக்கு பாராட்டுக்களை வாரி இறைக்கலாம்.