நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அவர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மார்க் ஆண்டனி.’
அந்த படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு சென்சார் சர்டிபிகேட்டுக்காக மும்பையில் (CBFC) விண்ணப்பித்த போது அங்குள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை நடிகர் விஷால் வன்மையாக கண்டித்து, அந்த விவகாரத்தை பிரதமர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பென்டு செய்யப்பட்டனர். அது தொடர்பான வழக்கை மும்பை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தமிழ் படங்களை இந்தியில் வெளியிட சென்சார் சர்டிபிகேட் வாங்கும் முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இதுவரை மும்பையில் மட்டுமே இந்தியில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி தமிழகத்திலேயே பெற்று கொள்ளலாம் என அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இனி எந்த தயாரிப்பாளரும் தமிழ் திரைப்படங்களின் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கு மும்பை செல்லவேண்டிய அவசியமில்லை
தமிழ் மொழியுடன் சேர்த்து ஏற்கனவே தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளுக்கு தமிழகத்திலேயே சென்சார் சர்டிபிகேட் பெற்று கொள்ளும் வசதி இருந்து வந்த நிலையில் தற்போது இந்தி மொழி ரிலீஸுக்கும் இந்த முறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஷால் மூலம் ஏற்பட்ட இந்த மாற்றம் தமிழ் சினிமாவுக்கு, தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் விஷாலை பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர்.