சந்தானம், மேகா ஆகாஷ் நடித்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் தியேட்டர்களில் 2-வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் யோகி, “வெறும் காமெடி படமாக மட்டும் இல்லாமல் படத்தின் ரைட்டிங்கும் நன்றாக இருந்தது எனப் பலரும் பாராட்டினார்கள். அந்த ரைட்டிங்கில் தலையிடாமல் சந்தானம் 63 நாட்களும் படத்தை நம்பினார். அவருக்கும், மற்ற நடிகர் நடிகைகள் அனைவருக்கும், உதவி இயக்குநர்களுக்கும், தொழில்நுட்பக் குழுவினருக்கும், படத்தின் வெர்றிக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் சந்தானம் பேசியபோது, “இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் போலவே அனைவரது கதாபாத்திரமும் மக்களுக்குப் பிடித்திருந்ததுதான் இந்தப் படத்தின் வெற்றி என்று நினைக்கிறேன். நாத்திகரோ ஆன்மீகவாதியோ நீங்கள் எப்படி இருந்தாலும் அந்த கண்ணோட்டத்தில் படம் பார்க்கலாம். அப்படிதான் இது அமைந்திருக்கிறது. பொதுவான ஒரு முடிவும்தான் இயக்குநர் கொடுத்திருக்கிறார். நான் ஆன்மீகவாதிதான். சோஷியல் காமெடி செய்வது கடினம். அதை இயக்குநர் அழகாக செய்திருக்கிறார். மக்களின் வாழ்வு இப்போது இறுக்கமாக இருக்கிறது. என்னையும் என்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். அதை பார்த்து தான் எனக்கு பல பட வாய்ப்புகளும் வந்தது. சிம்புவும் என்னை கூப்பிட்டார். இந்த இயல்பை எனக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார். என் படங்களுக்கு வந்தால் நீங்கள் சந்தோஷமாகப் போகலாம்” என்றார்.