இருவேறு மரணங்கள், ஒருவர் மீது சந்தேகம் என திரைக்கதையில் தீப்பிடித்தது போன்ற விறுவிறுப்பை வைத்திருக்கிற ‘விருந்து.’
ஆக்சன் கிங் அர்ஜுன், நிக்கி கல்ராணி தவிர தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்குப் பரிச்சயமில்லாத மலையாள நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவான திகில் கலந்த திரில்லர்.
தொழிலதிபர் ஒருவரும் அவருடைய மனைவியும் மரணமடைய, அந்த மரணங்களை கொலை என்ற கோணத்தில் பார்க்கும் போலீஸ் கொலைக்கு காரணம் யார் என தோண்டித் துருவும் பணியில் இறங்குகிறது. இறந்தவர்களின் மகள், அப்பாவையும் அம்மாவையும் கொன்றது தன் அம்மாவின் முன்னாள் காதலனாக இருக்கும் என சந்தேகப்படுகிறாள். அவரைத் தேடி போகிறாள். சந்தர்ப்பம் பார்த்து அவனைக் கொல்ல ஆயுதத்தை கையிலெடுக்கிறாள். அதன்பின் நடப்பதெல்லாம் எதிர்பாராத சம்பவங்கள்… கிளைமாக்ஸில் அதிர்ச்சி தரும் டிவிஸ்டும் உண்டு.
தொழில் வளர்ச்சி ஆலோசகராக வருகிற ஆக்சன் கிங் அர்ஜுன் வசிக்கிற காட்டு பங்களாவின் பிரமாண்டமும், அந்த வீட்டில் அவரது நடவடிக்கைகளும் பயமூட்டுகிறது. அவர் எதிரிகளைப் பந்தாடும்போதும், தன்னைக் கொலைகாரன் என சந்தேகப்பட்டு பழி வாங்க வந்த தொழிலதிபரின் மகளை நரபலியிருந்து காப்பாற்றும் காட்சியிலும் வெளிப்படும் வெறித்தனம் கவர்கிறது.
கல்யாணத்துக்குப் பின்னும் நிக்கி கல்ராணியிடம் பழைய அழகும் இளமையும் அப்படியே இருக்கிறது. தன்னைப் பெற்றவர்களின் மரணத்தை தாங்க முடியாமல் கலங்குவது, தன் அப்பாவையும் அம்மாவையும் கொன்றதாக சந்தேகப்பட்ட அர்ஜுனை கொல்லத் துணிவது என நேர்த்தியா நடிப்பை தந்திருக்கிறார்.
கதையில் நடக்கும் இரண்டாவது மரணத்தை நேரில் பார்த்த சாட்சியாய் முக்கிய கதாபாத்திரத்தை சுமந்து படத்தின் நிறைவு வரை ஒட்டிக் கொண்டிருக்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர் கிரிஷ் நெய்யார்.
சாத்தானை திருப்திப்படுத்துவதற்காக நரபலி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிற ஹரிஷ் பெராடியின் வில்லத்தனத்தில் இன்னும் கொஞ்சம் வீரியம் இருந்திருக்கலாம்.
தொழிலதிபராக முகேஷ், அவரது மனைவியாக சோனா நாயர் என மற்ற நடிகர் நடிகைகள் கதையின் தேவைக்கேற்ப நடித்திருக்க, பிரதீப் நாயர் ரவிச்சந்திரன் கூட்டணியின் ஒளிப்பதிவில் கேரளத்தின் பசுமையை, காட்டுப் பகுதிகளின் அழகை அணுஅணுவாக ரசிக்க முடிகிறது.
அட்வென்சர் திரில்லர் கதைக்களத்துக்கு ஏற்ற பின்னணி இசையைத் தந்திருக்கிறார் ரோனி ரஃபேல். ரதீஷ் வேகாவின் இசையில் பாடல்களில் இதமிருக்கிறது.
காதல் கசமுசா, கலர்ஃபுல் டூயட், காமெடி கலாட்டா என திரைக்கதையின் போக்கை அப்படி இப்படி திசை மாற்றாமல் முழுமையான திரில்லர் அனுபவத்தை தர நினைத்த இயக்குநர் தாமர கண்ணன்,
கிளைமாக்ஸில் நரபலி அதுஇதுவென திகிலூட்டும் அமானுஷ்ய சங்கதிகளை கோர்த்து விட்டதில் விருந்து அமர்க்களமான படையலாகியிருக்கிறது!