உபேந்திராவுக்கு வில்லங்க விவகாரங்களை தான் இயக்கும் படங்களில் புகுத்துவது பிடித்த விஷயம். இந்த முறை கல்கி பகவான் அவதாரமெடுத்து அதே வில்லங்க விவகாரத்தை வீரியமாக செய்திருக்கிறார்.
கதை நாயகர்களாக இருவர்; அதில் ஒருவர் நல்லவராக நடந்துகொள்ள, இன்னொருவர் தன்னை கல்கி பகவான் என சொல்லிக் கொண்டு மக்களை கொடுமைப்படுத்தும் அரக்கனாக வலம் வர, அவர் அப்படி கொடூரனாக மாறியிருப்பதற்கான காரணங்களே திரைக்கதை… அவர் மக்களுக்கு செய்யும் கொடுமைகளும் கொலைகளும் அதிர வைப்பவை.
நல்லவர் கெட்டவர் என கேரக்டர்களின் வித்தியாசத்துக்கேற்ப நடை உடை குரல் என அனைத்திலும் வெரைட்டி காட்டியிருக்கும் உபேந்திரா படு வித்தியாசமாக உருவாக்கியிருக்கும் கதைக்களம் பிரமாண்டத்தால் மிரட்டுகிறது.
மற்ற கதாபாத்திரங்களைச் சுமந்திருப்பவர்கள் தங்களின் பங்களிப்பை நேர்த்தியாக செய்திருக்க அஜனிஷ் லோக்நாத்தின் பின்னணி இசை படத்துக்கு தனி கம்பீரத்தை கட்டமைத்துள்ளது.
மக்களை அடைத்து வைத்திருக்கும் இடம், கடுமையான நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டது போல் சிதைந்து கிடக்கும் கட்டடங்கள் என பலவற்றை கவனம் ஈர்க்கும் விதமாக வடிவமைத்திருக்கும் கலை இயக்குநரின் உழைப்பு, அனைத்தையும் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவு படத்தின் பலம்.
கதையைப் புரிந்துகொள்வது சிரமமாக இருந்தாலும், தனித்துவமான திரைப்படங்களின் வரிசையில் இணைவதற்கான தகுதிகளுக்குப் பஞ்சமில்லை.
யு ஐ – வினோதம், வித்தியாசம், விபரீதம்!