காமெடி பேய்ப் படங்களுக்கான வழக்கமான டெம்ப்ளேட்டில் மற்றுமொரு படைப்பு.
அந்த கிராமத்தில் மன்னர் வழிவந்த குடும்பத்து வாரிசுகளிடம் ஒரு தங்க கிரீடம் இருக்கிறது. திருவிழா நாளில் மக்கள் தரிசிப்பதற்காக கிரீடத்தை வெளியில் எடுப்பது வழக்கம். இடையில் இருபது வருடங்களாக திருவிழா நடத்த முடியாமல் போகிறது.
அந்த கிரீடத்தை ஒருநாள் சிலர் திருடிக் கொண்டு ஓடும்போது அது விழுந்து உடைகிறது. உடைந்த கிரீடம், தான் தங்கமல்ல; போலி என்பதை காட்டிக் கொடுக்கிறது. ஊரே அதிர்கிறது.
இப்படி கதையின் ஒருபாதி கடந்தோட அந்த ஒரிஜினல் கிரீடம் என்னவானது? எங்கு போனது? என்பதையெல்லாம் மறுபாதியில் பார்க்க முடிகிறது.
கதையை 1999 காலகட்டத்திலும் நிகழ்காலத்திலும் நடக்கும் விதமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்
திருவிழாக்களில் திரை கட்டி படம் போடுகிற வேலை செய்கிற யோகிபாபு, மன்னர் குடும்பத்து வாரிசான இனியா மீது காதல் கொள்வது, தொடை நடுங்கியான தன்னை நம்பி வந்த இனியாவுடன் ஊரை விட்டு ஓட முயற்சிப்பது, ஊராரின் தாக்குதலுக்கு ஆளாவது, பேயாக சுற்றித் திரிந்து ஊர் மக்களின் உறக்கத்தைக் கெடுப்பது என தனது கலகலப்போடும் கதையின் தேவைக்கேற்ப கச்சிதமாகவும் தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.
வளமையான தேகம், வசீகர சிரிப்பு என வலம் வருகிற இனியா சில காட்சிகளில் மட்டும் துடிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
மொட்டை ராஜேந்திரனிடம் திருட்டுத் தொழில் பயிற்சி பெற்று, கிரீடத்தை திருட வந்து எதிர்பாராத பிரச்சனையில் சிக்கித் தவிக்கிற மகேஷ், பால சரவணன், சென்றாயன் குழுவினரின் காமெடி கலாட்டாக்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.
மொட்டை ராஜேந்திரன், பேய் வசிக்கும் கிணற்றுக்குள் இறங்கி படும் அவஸ்தைகள் கொஞ்சமே கொஞ்சம் ரசிக்க வைக்கின்றன.
சென்றாயன், இயக்குநர் மாரிமுத்து என தேர்ந்த நடிகர்களும் படத்தில் உண்டு.
கே.எஸ். மனோஜின் பின்னணி இசையும், ரவி வர்மாவின் ஒளிப்பதிவும் கச்சிதம்.
கதையை சற்றே பலப்படுத்தி, திரைக்கதையில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியிருந்தால் ‘தூக்கு துரை’க்கு மதிப்பெண்ணை தூக்கலாய் போட்டிருக்கலாம்.