‘நேர்மையாக இருப்பது சாதாரண விஷயமில்லை’ என்பதை எடுத்துக் காட்டி, அப்படி இருப்பதே அறம் என வலியுறுத்தும் படம்.
மாணிக்கம் லாட்டரிச் சீட்டு வியாபாரம் செய்பவர். அவர் முதியவர் ஒருவருக்கு விற்ற லாட்டரிச் சீட்டுக்கு ஒன்றரை கோடி பரிசு கிடைக்கிறது. முக்கியமான விஷயம் அந்த சீட்டு மாணிக்கத்திடமே இருக்கிறது. பரிசு விழுந்த விவரத்தை முதியவருக்கு தெரியப்படுத்த நினைக்கிறார் மாணிக்கம், தெரிவிக்காமல் நாமே எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் மாணிக்கத்தின் மனைவி. அவர் மறுக்க, மனைவி வற்புறுத்த அந்த பரிசு விழுந்த சீட்டை தட்டிப் பறிக்க போலீஸ் வலை விரிக்கிறது.
நேர்மையாக நடந்துகொள்ள நினைத்த மாணிக்கத்தின் எண்ணம் நிறைவேறியதா? அல்லது அவரது மனைவியின் வற்புறுத்தலுக்கு பலன் கிடைத்ததா? அல்லது அந்த பரிசுத் தொகை போலீஸின் கைக்கு போய்ச் சேர்ந்ததா? என்பதற்கான பதில்கள் பரபரப்புமிக்க திரைக்கதையாகியிருக்கிறது.
நேர்மையான மனிதராய் அதற்கேற்ற உணர்வுகளை அசத்தலான உடல்மொழியில் வெளிப்படுத்தியிருக்கும் சமுத்திரகனி,
அந்தம்மா சொல்றதுல தப்பில்லையே’ என்ற எண்ணம் நமக்கு உருவாகும்படி குடும்ப கஷ்டத்தை தீர்த்துக் கொள்ள வழி சொல்லி வற்புறுத்துகிற மனைவியாக கவனம் ஈர்க்கும் அனன்யா,
வறுமைச்சூழலால் சொன்ன வரதட்சணையை தர முடியாமல் போக, கணவனுடன் வாழாமல் தாய்மையடைந்த நிலையில் வீட்டுக்கு வந்துவிட்ட பெண்ணை வைத்துக்கொண்டு வேதனையில் வாடும் முதியவராக பரிதாபப்பட வைக்கும் பாரதிராஜா,
கனமான பாத்திரத்தில் நாசர், இளவயது மாணிக்கமாக விதேஷ், பாரதிராஜாவுக்கு மனைவியாக வடிவுக்கரசி, போலீஸ் அதிகாரிகளாக சேரன்ராஜ், கருணாகரன், சில நிமிட காமெடிக்கு ஸ்ரீமன், கதையோடு பின்னிப்பிணைந்த பாத்திரங்களில் இளவரசு உள்ளிட்ட அத்தனைப் பேரும் ஏற்ற கேரக்டர்களுக்கு பொருத்தமான நடிப்பால் கதைக்கு உயிரோட்டம் தந்திருக்கிறார்கள்.
சுகுமாரின் தரமான ஒளிப்பதிவாலும், விஷால் சந்திரசேகரின் தென்றலாகவும் சீற்றம் கூடியும் கடந்தோடும் பாடல்களாலும் திரில்லர் பாணியிலான திரைக்கதைக்கு பொருத்தமாக அமைந்த பின்னணி இசையும் படத்திற்கு பலம்.
இந்தக் காலத்திலும் நியாய நேர்மையை விடாப்பிடியாய் கட்டிக்கொண்டு, பலரது பார்வையில் பிழைக்கத் தெரியாதவனாய் மதிக்கப்படுகிற சிலரை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட அரிய மனிதனாய் மாணிக்கத்தை படைத்து, அப்படிப்பட்டவர்களுக்கும் என்றாவது ஒருநாள் வாழ்வில் உயரும் வாய்ப்பு வந்து சேரும் என படம் மூலம் பாடம் நடத்தியிருக்கிற இயக்குநர் நந்தா பெரியசாமி நிச்சயம் பாராட்டுக்குரியவர்.