கடந்த சில வருடங்களாக தனக்கு முக்கியத்துவம் தருகிற கதைகளில் நடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிற த்ரிஷாவுக்கு, மீண்டும் அப்படியொரு கதைக்களம் கிடைத்திருக்கிறது.
ஒரு பரபரப்பான சாலை. அதில் நடந்த விபத்தில் கணவனையும் மகனையும் இழக்கிற த்ரிஷா, பின்னர் ‘நடந்தது விபத்தல்ல’ என்பதையும், அந்த பகுதியில் தொடர்ச்சியாக விபத்துகள் நடப்பதையும் கண்டுபிடிக்கிறார். விபத்துகள் ஏன் நடக்கின்றன? குற்றவாளி யார்? என்பதையும் தெரிந்துகொள்கிறார். அவர் தெரிந்து கொள்வதெல்லாம் காட்சிகளாக விரிய அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…
அப்போதும் இப்போதும் இளமையாகவே இருக்கிற த்ரிஷா, காவல்துறை புலனாய்வு அதிகாரி ரேஞ்சுக்கு படம் முழுக்க சுறுசுறுப்பாக வலம் வருகிறார். குறை சொல்ல முடியாத நடிப்பைத் தருகிறார்.
பரமசாதுவாகவாகவும், கொடூர வில்லனாகவும் நடிப்பில் அட்டகாச அதிரடி நிகழ்த்தியிருக்கிறார் சபீர்.
த்ரிஷாவுக்கு சிநேகிதியாக வருகிற மியா ஜார்ஜ் அளவான நடிப்பைக் கொடுக்க, சந்தோஷ் பிரதாப், விவேக் பிரசன்னா, சூப்பர் குட் சுப்ரமணி, செம்மலர் அன்னம் உள்ளிட்டோர் தங்கள் பாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து நடித்திருக்கின்றனர். வேல ராமமூர்த்தி சற்றே வித்தியாசமான நடிப்பால் அதிகமாய் கவனிக்க வைக்கிறார்.
விறுவிறுப்பான கிரைம் திரில்லருக்கு தேவையான பின்னணி இசையை சரிவிகிதத்தில் கொடுத்திருக்கிறார் சாம் சி எஸ்.
சற்றே வித்தியாசமான குற்றப் பின்னணியை மையமாக வைத்து, கதாநாயகியை ஆளுமை மிக்க கதைநாயகியாக்கி, கவனம் ஈர்க்கும் விதத்தில் திரைக்கதை உருவாக்கி இயக்கிய அருண் வசீகரனுக்கு அப்ளாஸை அள்ளிக் கொடுக்கலாம்.