ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம்.
இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர். அவர் நம்பும்படி சில சம்பவங்கள் நடக்கிறது. சிலர் மரணமடைகிறார்கள். அந்த பழி மித்ரா மீது விழுகிற நிலைமை உருவாகிறது.
அத்தனைக்கும் காரணம் தன் கண்ணுக்கு தென்பட்டு மறையும் பேய்தான் என்பது புரிகிறது. அதன் நோக்கம் என்ன, அது ஏன் தன்னை தொந்தரவு செய்கிறது என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அவர் எதை தெரிந்து கொள்கிறார் என்பதி கதையின் மீதி. இயக்கம் ஜெய்தேவ்
நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் பாவனா. பேயை பார்க்கும்போது உருவாகும் படபடப்பு, தனக்கு ஏற்பட்டிருக்கிற சிக்கலுக்கான காரணத்தை தெரிந்துகொள்ளும் தவிப்பு என படம் முழுக்க எனர்ஜி குறையாமல் நடித்திருக்கிறார்.
பேயாக வருகிற சங்கீதா மிரட்டலான பங்களிப்பைத் தர, காவல்துறை அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராமன் அலட்டலற்ற கம்பீரத்தை தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.
அமானுஷ்ய சக்திகளைக் கண்டறிகிற ஆராய்ச்சியாளராக ரமேஷ் ஆறுமுகம், பாவனாவின் அறைத் தோழியாக வந்து அமானுஷ்ய சக்தியால் பாதிக்கப்படுகிறவர் என மற்றவர்கள் கதாபாத்திரங்களை உள்வாங்கி நடிதிருக்க, பின்னணி இசையை பயத்தின் சதவிகிதத்தை கூட்டும் விதத்தில் தந்திருக்கிறார் வருண் உன்னி.
கெளதம் ஜியின் ஒளிப்பதிவு காட்சிகளை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறது.
தீயவர்களால் கொலை செய்யப்பட்டவர்கள் பேயாக வந்து பழிவாங்குகிற ஹாரர் படங்களுக்களுக்கான வழக்கமான டெம்ப்ளேட்டில் மற்றுமொரு படம் என்றாலும் சில சுவாரஸ்யமான, சுறுசுறுப்பான காட்சிகளால் போர் அடிக்காத அனுபவம் தருகிறது டோர்.