கமர்ஷியல் ஆக்சன் ஜானரில் பொழுதுபோக்கு மசாலா சேர்த்து உருவாகியிருக்கும் படம்.
குறிப்பிட்ட ஒருவரிடம் 1000 கோடி மதிப்பிலான தங்கமும் வைரமும் சேமிக்கப்பட்டிருக்க, அதை ஒரு இளைஞர் கைப்பற்றி ரகசிய இடத்தில் பதுக்குகிறார். அந்த தங்கத்தைக் கடத்த இன்னும் இரண்டு இளைஞர்கள் திட்டமிடுகிறார்கள். கதை இப்படி தொடங்கி, கடைசியில் அந்த தங்கம் யாருக்கு சொந்தமாகும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி நகர்கிறது.
ஒரே நபரிடம் 1000 கோடி தங்கமும் வைரமும் சேர்ந்தது எப்படி, அதை கைப்பற்ற நினைப்பவர்களின் பின்னணி என்ன என்பதெல்லாம் கதையின் விறுவிறுப்பான பக்கங்கள்… இயக்கம் ராம் பிரபா
தங்கத்தை தட்டித் தூக்கி தன் இடத்தில் பதுக்குவது, தன் வசமிருக்கும் தங்கத்தை களவாட குறி வைப்பவர்களைக் அடித்து துவம்சம் செய்வது என ஆக்சன் ஹீரோவாய் மாறி துப்பாக்கியின் துணைக்கு வைத்துக்கொண்டு வெளுத்து வாங்கியிருக்கிறார் பிரஜன்.
பிரஜனிடமிருந்து தங்கத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்யும் விஜய் விஷ்வா, தன் முயற்சிக்கு குறுக்கே வருபவர்களை சரமாரியாக சுட்டுத்தள்ளி அதிரடி வில்லனாக அதகளம் செய்கிறார்.
நடை, உடையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெராக்ஸாய் மாறி, தன் குடும்பத்தை அழித்த மோசடிக் கும்பலை சுற்றி வளைத்து பழிவாங்கும் வேலையை படு ஸ்டைலாக செய்திருக்கிறார் ‘லொள்ளுசபா’ ஜீவா.
படத்திலிருக்கிற அழகழகான மூன்று ஹீரோயின்கள் பாடல் காட்சிகளை உற்சாகமாக்கியிருக்கிறார்கள்.
மற்றவர்கள் கதையின் தன்மையுணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
திரும்பிய பக்கமெல்லாம் துரத்தல்கள், துப்பாக்கிகளுக்கு ஓய்வில்லாத ஆக்சன் சம்பவங்கள் என படம் முழுக்க பதற்றம் சூழ்ந்திருக்க அதற்கேற்ப பின்னணி இசையைத் தெறிக்க விட்டிருக்கிறார் மனோஜ்குமார் பாபு.
ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம் கையாண்டிருக்கும் கேமரா கோணங்கள் படத்தின் பலம்.
ஆக்சன் கோரியோகிராபியில் மிரட்டல் செல்வா மிதமான மிரட்டல் தெரிகிறது.
மூன்று ஹீரோக்களை உருவாக்கி, அவர்களை அவர்களுக்குள் வில்லன்களைப் போல் மோதவிட்டு, யார் நல்லவர் யார் கெட்டவர் என ரசிகர்கள் சுலபத்தில் யூகிக்க முடியாதபடி திரைக்கதையில் பரபரப்பை கொண்டு வந்திருக்கும் இயக்குநர் ராம் பிரபா, பொழுதுபோக்குக்கு மினிமம் கேரண்டி தரும் விதத்தில் காட்சிகளைக் கோர்த்திருக்கிறார்.
சிட் பண்ட், எம் எல் எம் என எதுவாக இருந்தாலும் அதிக வட்டி கிடைக்கும், இரட்டிப்பு லாபம் பெறலாம் என ஆசை காட்டினால், மக்கள் கடன் வாங்கிக்கூட முதலீடு செய்ய, ஏமாற தயாராக இருக்கிறார்கள். இந்த உண்மையை உடைத்துச் சொல்லியிருப்பதால் இந்த படம் விழிப்புணர்வுப் படைப்பு என்ற வரிசையிலும் இடம் பிடிக்கிறது.
தரைப்படை _ சூடான போர்க்களம்!