விக்ரம் உடலை வருத்திக் கொண்டு நடித்திருக்கும் மற்றுமொரு படம். பார்ப்பது தமிழ்ப் படம்தானா? அல்லது ஹாலிவுட் படமா? என பிரமிக்க வைக்கும் விதத்தில் மேக்கிங்கில் இயக்குநர் பா.இரஞ்சித் மிரட்டியிருக்கும் ‘தங்கலான்.’
சில நூறு வருடங்கள் முன் நடக்கிற கதை. தாங்கள் காலங்காலமாய் விவசாயம் செய்து பிழைக்கிற வயல்வெளிகளை அபகரித்துக் கொண்டு, அந்த வயல்களிலேயே தங்களை வேலை செய்ய வைக்கிற ஜமீன்தார். இன்னொரு பக்கம், தங்கம் வெட்டியெடுத்து தரும் வேலைக்காக அழைக்கிற வெள்ளைக்காரர். ஜமீன்தாரிடம் அடிமையாக வேலை செய்வதற்குப் பதிலாக, தன்னை மரியாதையோடு நடத்தும் வெள்ளைக்காரனுக்கு தங்கம் வெட்டியெடுத்துக் கொடுத்து, உழைப்புக்கான பங்கை அதே மரியாதையோடு பெறலாம் என முடிவெடுக்கிறான் தங்கலான்.
தன்னை நம்புகிற, தன்னை தலைவனாக கருதுகிற மக்களை அழைத்துக் கொண்டு தங்கம் நிறைந்திருக்கும் இடத்துக்கு போகிறான். உழைப்பதற்குத் தயங்காத அந்த மக்கள் கஷ்டப்பட்டு தங்கத்தை வெட்டியெடுத்தபின், வெள்ளைக்காரனின் கொடூர முகம் வெளிப்படுகிறது. உழைப்புக்கேற்ற பங்கு தர மறுப்பதோடு, அவனது துப்பாக்கி தங்கலானையும் அவனை நம்பி வந்த மக்களையும் வேட்டையாடத் தயாராகிறது.
இரு தரப்பும் வெறித்தனமாக மோதிக்கொள்ள தங்கம் யாருக்குச் சொந்தமானது என்பதை நோக்கி நகர்கிறது கதை…
கோலார் தங்க வயல் வரலாற்றுச் சம்பவங்களை மையமாக வைத்து பின்னப்பட்ட கதையில், தங்கத்தைப் பாதுகாக்கும் சூனியக்காரி, அவளுக்கும் தங்கலானின் தாத்தாவுக்கும் நடந்த மோதல், அவளது ரத்தம் பட்ட இடமெல்லாம் தங்கமாக மாறும் அதிசயம், பல காலம் கழித்து அதே சூனியக்காரியுடன் தங்கலானும் மோதுதல் என திரைக்கதையில் ஏராளமாய் கற்பனை கலந்து, கூடவே தனது தனிப்பட்ட கொள்கை, கோட்பாடு, அரசியல் என பலவற்றையும் பந்தி வைத்திருக்கிறார் பா.இரஞ்சித்.
விக்ரம் அழுக்கேறிய துணிகளை தாறுமாறாய் சுற்றிக் கொண்டு பழங்குடி இனத்தவராகவே மாறியிருக்கிறார். தாத்தா காடனாக வரும்போதும் சரி, பேரன் தங்கலானாக வரும்போதும் சரி அதிகார பலமும் ஆயுத பலமும் கொண்டவர்களை எதிர்க்கும்போது நடிப்பில் வீரியமான வெறித்தனம் காட்டியிருக்கிறார். தன் மனைவி மக்களோடு பழகும்போது எளிய மனிதனாகி பாசக்காரனாக வேறொரு பரிமாணத்துக்கு தாவியிருக்கிறார். உடலை வருத்திக் கொண்டு பட்ட பாட்டுக்கு விருதுகள் வரிசை கட்டும். உற்சாகத்தில் மிதக்க சீயான் இப்போதே தயாராகலாம்.
தங்கலானின் மனைவியாக பூ பார்வதி. தோற்றத்தில் பழங்குடிப் பெண்ணாக மாறியிருப்பவர் நடிப்பிலும் தன்னால் முடிந்த உச்சத்தை தொட்டிருக்கிறார். பசுபதி, மெட்ராஸ் ஹரி என கூட்டம் கூட்டமாய் திரண்டிருக்கிற நடிகர் நடிகைகள் அத்தனைப் பேரும் அவரவர் ஏற்றிருக்கும் பாத்திரமாக தங்களை உருமாற்றிக் கொண்டு கச்சிதமான பங்களிப்பை தந்திருக்கின்றனர்.
வரலாறும் கற்பனையும் கலந்து பயணிக்கும் கனமான கதைக்களத்தை தனது பின்னணி இசையால் தரம் உயர்த்தியிருக்கும் ஜீ வி பிரகாஷ், பாடல்களை ரசிக்கவும் மனதில் பதியவும் வைக்கிறார்.
கடுமையான விமர்சனங்களையும், விவாதங்களையும் உருவாக்கப் போகும் தங்கலான், தமிழ் சினிமாவின் தனித்துவமான அடையாளமாய் என்பதை மறுப்பதற்கில்லை.