சாதா பூனை தாதா பூனையாக அவதாரமெடுத்து அட்வென்சரில் ஈடுபட்டால் சுவாரஸ்யமாக இருக்கும்தானே? கூடவே கதை காமெடியாகவும் நகர்ந்தால் சிரித்து ரசிக்கலாம்தானே? அதுவும் அனிமேசன் உருவாக்கம் என்றால் மகிழ்ச்சியின் சதவிகிதம் அதிகரிக்கும்தானே? அப்படியொரு சுவாரஸ்யமான, காமெடியான கதையில், அனிமேசனில் உருவாகியிருக்கிறது ‘தி கார்ஃபீல்டு மூவி.’
கார்ஃபீல்டு படங்களில் வரிசையில் 6-வது படம் இது.
ஒரு சூழ்நிலையில் தந்தையைப் பிரிந்த கார்ஃபீல்டு பூனை, ஒரு நல்ல மனிதரின் அரவணைப்பில் சுகபோகமாக வாழ்கிறது. அங்கு அந்த பூனைக்கு ஓடி என்ற நாய்க்குட்டி நண்பனாக கிடைக்க, அதோடு சேர்ந்து ஜாலியாக பேசி, விளையாடி நாட்களைக் கடத்துகிறது.
ஒரு கட்டத்தில் கார்ஃபீல்டு, தன் தந்தையை சந்திக்கிறது. அதன்பின் கதைக்களம் காட்டுக்கு மாறுகிறது. அங்கு ஒரு விலங்கோடு தொடர்பு உருவாக, அதன்பின் கார்ஃபீல்டின் தந்தைக்கு ஆபத்து உருவாகிறது. அந்த ஆபத்திலிருந்து தந்தை பூனையை மீட்க கார்ஃபீல்டு களமிறங்க அதன் ரிசல்ட் என்ன என்பது கிளைமாக்ஸ்.

கார்ஃபீல்டுக்கு பிரபல நடிகர் கிரிஸ் பிராட் கொடுத்திருக்கும் குரலும், பூனை, நாய் என மற்ற விலங்குகள் சாம்வேல் ஜாக்சன், ஹார்வே க்யூலன் உள்ளிட்டோரின் குரலில் பேசுவதும் கவனிக்க வைக்கிறது.
கார்ஃபீல்டு உணவுப் பிரியராக இருப்பது, தாறுமாறாக தின்று தீர்ப்பது, ரயிலில் ஏறும் முயற்சியில் மரத்துக்கு மரம் தாவிக் கொண்டிருப்பது ரசிக்க வைக்கிறது.
அப்பா பூனை, மகன் பூனைக்கு இடையிலான பாசப்பிணைப்பு மட்டுமல்லாது,
கார்ஃபீல்டு காணாமல் போய்விட, அதை வளர்ப்பவர் சோகத்தில் தாடி வளர்த்து, போலீஸில் புகார் கொடுத்து தேடுவதில் இருக்கிற பிரியமும் நெகிழச் செய்கிறது.
நீங்கள் உங்கள் குழந்தைகளை ரசிக்க வைக்க, சிரிக்க வைக்க விரும்புகிற பெற்றோர் என்றால் குழந்தைகளை கூட்டிக்கொண்டு தியேட்டருக்கு கிளம்பலாம். கொடுக்கும் காசுக்கு திருப்தி கேரண்டி.