விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூர் நடித்துள்ள ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தை பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி தெலுங்கிலும், தமிழிலும் வெளியாகிறது. முன்னதாக இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
விஜய் தேவரகொண்டா, படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் ‘திங்க் ஸ்டுடியோஸ்’ உரிமையாளர் ஸ்வரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விஜய் தேவரகொண்டா பேசியபோது, ”என்னுடைய நடிப்பில் வெளியான முதல் படம் ‘அர்ஜுன் ரெட்டி’க்கு நீங்கள் அளித்த ஆதரவு மறக்க இயலாது. தற்போது மீண்டும் இயக்குநர் பரசுராமுடனும், தயாரிப்பாளர் தில் ராஜுடனும் இணைந்து ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன். இயக்குநர் பரசுராமுடன் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தேன். அதனைத் தொடர்ந்து ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தில் நடித்திருக்கிறேன். இது அந்த படத்தை விட கூடுதல் உயரத்திற்கு என்னை அழைத்துச் செல்லும் என நம்புகிறேன். இதற்கு முன் எனது நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவு பிரமிப்பாக இருந்தது. இதே போல் இந்த படத்திற்கும் உங்களின் ஆதரவும் அன்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடுத்தர வர்க்கத்தை இளைஞராக நடித்திருக்கிறேன். அன்பு செலுத்துவதிலும் காதலிப்பதிலும் நேசிப்பதிலும் கோபத்திலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலையை எதிர்கொள்பவன்தான் இப்படத்தில் நாயகன். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
படத்தின் நாயகி மிருனாள் தாக்கூர் திறமையாக நடித்து, தன்னுடைய நடிப்பு முத்திரையை பதித்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவும் ரசிகர்களை வெகுவாக கவரும்.
தமிழ் இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்றார்.