காமெடி நடிகராக அறியப்படுகிற கொட்டாச்சி இயக்கிய ‘கழுமரம்’ படத்தில் கத்தியின்றி, இரத்தமின்றி கதாநாயகனின் நிம்மதியைக் கெடுக்கும் வில்லனாக வெளுத்து வாங்கியிருக்கிறார் தமிழ் பாரதி.
படத்தில் அவரது நடிப்பு இயல்பாக இருப்பதோடு, குரலில் இருக்கும் கம்பீரம் ஏற்றிருக்கும் வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறது.
பைரவி, கிருஷ்ணா காட்டேஜ், காத்து கருப்பு, என் தோழி என் காதலி என் மனைவி, அம்மு, கனா காணும் காலம், அஞ்சறைப்பெட்டி, சுவை தேடி, சூரிய புத்திரி என பல்வேறு தொடர்களில் இயக்குநராக பணியாற்றிய தமிழ் பாரதி சின்னத்திரை இயக்குநர் சங்கத்தின் பொருளாளர் பொறுப்பிலும் தொடர்கிறார்.
அவரிடம், ‘நடிகரானது எப்படி?’ என கேட்டபோது, கழுமரம் படத்தின் இயக்குநர் கொட்டாச்சி அன்னமகன் என் நீண்டகால நண்பர்; சகோதரரை போன்றவர். அவரது படத்தில் நடிக்க சொன்னபோது, ‘நடிப்பெல்லாம் எனக்கு வராது’ என்றேன். ‘நீங்க நடிக்கவெல்லாம் வேணாம்; இப்ப எப்படி என்கிட்ட பேசறீங்களோ அப்படியே எதார்த்தமா செய்யுங்க, அது போதும்’ என்றார். அதன்படியே செய்துள்ளேன். பாராட்டுக்கள் குவிகிறது” என்றார்.
‘அடுத்தடுத்து பல படங்களில் நடித்து புகழ் வெளிச்சம்கூடட்டும்’ என்று வாழ்த்தினோம்.