சமூக அவலங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘சூரியனும் சூரியகாந்தியும்.’
சாதி வெறியர்கள் சூழ்ந்திருக்கும் ஊரில், மேல் சாதி இளைஞன், கீழ் சாதிப் பெண்ணைக் காதலிக்கிறான்.
சுருக்கமாகச் சொன்னால் படத்தின் கதை அவ்வளவுதான். கொஞ்சம் விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால்…
படம் இயக்குவதை லட்சியமாக வைத்திருக்கும் ஒருவர், தயாரிப்பாளரிடம் தன் கதையை சொல்வதாய் படம் தொடங்குகிறது. அவர் சொல்லச் சொல்ல அந்த கதை காட்சிகளாக விரிகிறது. அதில்,
படத்தை இயக்கியிருக்கிற ஏ.எல்.ராஜாவுக்கு படத்தில் முதன்மையான கதாபாத்திரம். அவர் தன் தம்பியுடன் சேர்ந்து சிலபல குற்றச் செயல்களைச் செய்வதும், குடி போதையில் மிதப்பதுமாய் இருக்கிறார். அந்த அண்ணன், தம்பி கையில் ஓரு செல்போன் கிடைக்கிறது. அதில் தொடர்பு கொண்டு பேசிய பெண், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறாள்.
அண்ணனும், தம்பியும் அவள் யாரென கண்டுபிடித்து தற்கொலையைத் தடுக்க நினைக்கிறார்கள். ஆனால், மீண்டும் அவளை தொடர்பு கொள்ள முடியாத நிலைமை.
அவள் யார்? தற்கொலை முடிவுக்கு வந்த காரணம் என்ன? அவளை கண்டுபிடிக்க முடிந்ததா? காப்பாற்ற முடிந்ததா? இதற்கான பதில்களாய் வலியும் வேதனையும் நிரம்பிய சம்வங்களை அடுக்கியிருக்கிறது திரைக்கதை.
கதையின் நாயகி செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகள். அவளை மேல் சாதிக்கார இளைஞன் காதலிக்க, அந்த காதலை சாதித் தலைவர் எதிர்க்கிறார். காதலர்கள் அவரை எதிர்க்கிறார்கள். பின்னர் அவரால் அந்த காதலர்கள் அனுபவிப்பதெல்லாம் பல படங்களில் பார்த்தவைதான்… மனம் கலங்கச் செய்பவைதான். கிளைமாக்ஸில் ஒன்றிரண்டு திருப்பங்கள் எட்டிப் பார்க்கின்றன…
செருப்பு தைப்பவரின் மகளாக வருகிற ரிதி உமையாள் சதைப்பிடிப்புடன் லட்சணமாக இருக்கிறார். காதல், பாடல் என நகரும் காட்சிகளில் நடிப்பில் தனித்துவம் ஏதுமில்லை என்றாலும் காமவெறி பிடித்தவனை எதிர்த்து சீறிப் பாயும்போது துடிப்பான நடிப்பை காட்டியிருக்கிறார். கவர்ச்சி காட்டுவதிலும் குறை வைக்கவில்லை.
உமையாளைக் காதலிக்கும் இளைஞன் சற்றே பாவப்பட்ட தோற்றத்திலேயே இருக்கிறார். காதலுக்கு எதிர்ப்பு, சாதித் தலைவருடன் மோதல் என நாட்கள் நரகமாகி விட அந்த தோற்றம் பரிதாபமாகி விடுகிறது. காதல், கோபம், இயலாமை என பலவித உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பது கச்சிதமாக இருக்கிறது.
இயக்குநர் கனவில் தயாரிப்பாளரிடம் அசத்தலாக கதை சொல்வது, இடையில் தன்னை மிரட்டுகிறவர்களிடம் பணிந்து போவது, லட்சியம் நிறைவேறாமல் வேதனையில் மனம் உடைவது என தன் பங்கை சரியாகச் செய்திருக்கிறார் அப்புக் குட்டி.
அரசியல்வாதியாக, சாதித் தலைவராக வருகிற ராஜசிம்மன் கற்பழிப்பு, ஆணவக் கொலை என மனிதாபிமானமற்ற செயல்களை அதற்கான கெத்துடன் நிறைவேற்றியிருக்கிறார்.
திருட்டு, ஏமாற்று, குடி என வலம் வரும்போது பெரிதாய் கவராத ஏ எல் ராஜா, தற்கொலையை தடுக்க துடிப்பது, காதலர்களை சேர்த்து வைக்க எடுத்துக் கொள்ளும் முயற்சி என வீரியமான தருணங்களில் கம்பீரமான நடிப்பால் கவர்கிறார். அவருக்கு தம்பியாக வருபவர், அம்மாவாக வருபவர், தயாரிப்பாளராக வருகிற சந்தானபாரதியிலிருந்து மற்ற நடிகர், நடிகைகள் கதாபாத்திரங்களின் தன்மையுணர்ந்து பங்களித்திருக்கிறார்கள்.
ஆர் எஸ் ரவி பிரியன் பாடல்களுக்கு தந்திருக்கும் இசை தாலாட்டின் சுகத்தைத் தர, பின்னணி இசை கதைக்கு பொருந்தி பயணித்திருக்கிறது. திருவாரூர் ராஜாவின் ஒளிப்பதிவில் எளிமையும் நேர்த்தியும் இருக்கிறது.
காலங்காலமாக பார்த்து வருகிற சாதி வெறி ஆணவக் கொலை படங்களின் வரிசையில் பத்தோடு பதினொன்றாக சேர்கிற இந்த சூரியனும் சூரியகாந்தியும், சமுகத்தில் இப்போதும் தொடர்கிற சாதி வெறியின் கோரத் தாண்டவத்திற்கு சாட்சியாக எழுந்து நிற்பதால் படக்குழுவை பாராட்ட வேண்டியிருக்கிறது!