பார்வைத் திறனில் குறைபாடு கொண்டவர்களை கதையின் முக்கிய பாத்திரமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்ததுண்டு. அந்த வரிசையில் ‘சூரகன்.’
காவல்துறை அதிகாரியான ஈகன் தன் பார்வைத் திறனில் இருக்கிற வினோதமான சிக்கலால் ஒரு நபரை தவறான முறையில் சுட்டுவிடுகிறார். அதனால் பணியிலிருந்து சஸ்பென்ஸ் செய்யப்படுகிறார். சஸ்பென்ஸ் செய்யப்பட்டாலும் தன் உயரதிகாரி தலையிட வேண்டாம் என்று சொன்ன ஒரு விவகாரத்தை தோண்டித் துருவ முயற்சிக்கிறார். அந்த முயற்சி அவரை வெவ்வேறு பாதைகளில் இழுத்துப் போகிறது.
அமைச்சர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை, அந்த கொலையை செய்தவர்களை அடையாளம் காண்கிறார். கொலைக்கான காரணத்தையும் தெரிந்து கொள்கிறார். அதனால் சிலபல பிரச்சனைகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகிறது. அதையெல்லாம் அவர் எப்படி சமாளித்து மீள்கிறார் என்பதே கதை. இயக்கம் சதீஷ் கீதாகுமார்
கதையின் நாயகன் ஈகனாக கார்த்திகேயன். உடற்பயிற்சியால் முறுக்கேறிய உடற்கட்டு, களையான முகவெட்டு என தோற்றத்தால், சதிகாரர்களை நெருங்குவதில் காட்டும் பரபரப்பால், சண்டைக் காட்சிகளில் காட்டும் சுறுசுறுப்பால் கவர்கிறார். பிரபல ஹீரோக்கள் ஒன்றிரண்டு பேரை நினைவூட்டினாலும் நடனமும் ஈர்க்கிறது.
உடையில் மெல்லிய கவர்ச்சி, புன்னகையில் வசீகரம் என கவனிக்க வைக்கிற சுபிக்ஷா, கொஞ்சமே கொஞ்சம் மாறுபட்ட ஹெஎர் ஸ்டைலில் வில்லனாக வருகிற வின்சென்ட் அசோகன், வழக்கமான தெனாவட்டை வெளிப்படுத்தும் மன்சூர் அலிகான், நாயகனுக்கு மாமாவாக பாண்டியராஜன், பிரதான வில்லனாக சுரேஷ் மேனன்… இன்னும் நிழல்கள் ரவி, வினோதினி, ஜீவா ரவி. டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர், ரேஷ்மா பசுபுலேட்டி என முக்கிய பாத்திரங்களில் வருபவர்களின் நடிப்பு நேர்த்தி.
இயக்குநர் சதீஷ் கீதாகுமாருடன் இணைந்து நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஜேசன் வில்லியம்ஸ்.
அச்சு ராஜாமணியின் பின்னணி இசையில் அதிரடியும் அதிர்வும் அதிகம்.
சூரகன் – 96 நிமிட எளிமையான கிரைம் திரில்லர் அனுபவம்!