ஆயுள் தண்டனைக் கைதியொருவன் பரோலில் வந்து, சிலரை பரலோகத்துக்கு அனுப்பும் கதைக்களம்.
அவனுக்கு ஏன் தண்டனை கிடைத்தது? தண்டனைக்கு ஆளாக்கியவர்கள் யார்? சிம்பிளான திரைக்கதையில் ‘சைரன்.’
உயிர் காக்கும் உன்னத பணியில் அம்புலன்ஸ் டிரைவராக ஜெயம் ரவி. சாதி வெறி பிடித்த போலீஸுக்கு பகையாளியாகி மனைவியைப் பறிகொடுத்து தவிப்பதாகட்டும், மகளின் வெறுப்பைச் சம்பாதித்து மனம் கலங்குவதாகட்டும், சதிகாரர்களை வித்தியாசமான முறையில் சம்ஹாரம் செய்வதாகட்டும், சண்டைக் காட்சிகளில் வெறியேறி சீறுவதாகட்டும், யோகிபாபுவுடன் சேர்ந்து கலகலப்பூட்டுவதாகட்டும் அத்தனைக்காகவும் பாராட்டுக்களை அன்லிமிடெடாய் அள்ளிக் கொடுக்கலாம்.
எவன் நல்லவன் எவன் கெட்டவன் என தெளிவாக புரிந்துகொள்ள முயற்சிக்காமல், மனம்போன போக்கில் அதிகாரம் செலுத்துகிற போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ். நடிப்பிலிருக்கும் அலட்டல் அசத்தல்.
பரோலில் வந்த ஜெயம் ரவியை கண்காணிக்க நியமிக்கப்பட்டு, அவருக்கு நண்பனான மாறிவிடுகிற யோகிபாபுவின் அப்பாவித்தனம் கலகலப்புக்கு கேரண்டி தருகிறது.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக வருகிற அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் பங்களிக்க பெரிதாய் வாய்ப்பில்லை என்றாலும் பாவப்பட்ட பாத்திரத்திற்கு அவரது பரிதாப தோற்றம் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
சாதி வெறிபிடித்த டி எஸ் பியாக சமுத்திரகனி, போலீஸ் அதிகாரியாக அருவி மதன், ஹீரோவுக்கு அம்மாவாக துளசி, தங்கையாக சாந்தினி, மகளாக யுவினா பார்த்தவி என மற்றவர்களின் நடிப்பு நேர்த்தி.
பின்னணி இசையால் காட்சிகளுக்கு வேகமூட்டியிருக்கிறார் சாம் சிஸ்.
ஜீவி பிரகாஷின் இசையில் பாடல்களில் தாலாட்டின் மென்மையை அனுபவிக்கலாம். ‘அடியாத்தி’ பாடலில் உற்சாகம் வழிகிறது.
வழக்கமான பழிவாங்கல் கதையில் அப்பா மகள் பாசம், காதலுக்கு எதிரான சாதிவெறி என பல அம்சங்களை கலந்து கமர்ஷியல் படைப்பாக தந்திருக்கும் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ், தனக்கு விறுவிறுப்பாக கதை சொல்லத் தெரியும் என நிரூபித்திருக்கிறார். வித்தியாசமாகவும் சொல்லியிருந்தால் சைரன் சுமந்த ஆம்புலன்ஸ் பாய்ச்சல் அதிரிபுதிரியாக இருந்திருக்கும்.