வெட்டுக் குத்து, ரத்தச்சகதி என தமிழ் சினிமா தடம்மாறி தடுமாறிக் கொண்டிருக்கும் சூழலில், மனதுக்கு இதம்தரும் படமாக, குழந்தைகளின் உலகத்தை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தியிருக்கும் படைப்பாக மலர்ந்திருக்கிறது ‘ஷாட் பூட் த்ரீ.’
அங்குமிங்கும் தாறுமாறாய் திரிந்து தொந்தரவு தருகிற தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்க, அவற்றை பிடித்து மயக்க மருந்து கொடுத்து புதைக்க அரசுப் பணியாளர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சூழ்நிலையில், சிறுவன் கைலாஷ் வளர்க்கும் மேக்ஸ் என்ற நாய் காணாது போகிறது.
கைலாஷோடு அவனது நண்பர்கள் பூவையார், வேதாந்த், பிரணதி கைகோர்க்க மேக்ஸை தேடும் படலம் துவங்குகிறது. அதன் ரிசல்ட் என்ன என்பதே கதை. இயக்கம் அருணாச்சலம் வைத்தியநாதன்
பாசம் காட்டி வளர்க்கும் நாய் தொலைந்துபோனதால் ஏற்பட்ட மனவலியை கச்சிதமாக உணர்த்தியிருக்கிறது சிறுவன் கைலாஷின் நடிப்பு.
வளருமிடமும், வாழ்க்கைச் சூழலும் ஒருவனை எந்தளவுக்கு மோசமாக்கும் என்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். அதே சூழல் ஒருவனை எந்தளவுக்கு பக்குவப்படுத்தும் என்பதையும் இக்கட்டான தருணத்தில் பதற்றமின்றி செயல்பட உதவும் என்பதையும் பூவையாரின் கதாபாத்திரம் மூலம் உணர்த்த நினைத்திருக்கிறார் படத்தின் இயக்குநர். அவரது எண்ண ஓட்டத்தை சரியாக பிரதிபலித்திருக்கிறது பூவையாரின் நடிப்பு!
பாடகி பிரணதியின் இயல்பான நடிப்பும், அந்த சிறுமியின் குரலில் சிங்காரவேலனே பாடலும் மனதை நிறைக்கிறது.
சிறுவன் வேதாந்த் கதையின் தேவைக்கேற்ப நடித்திருப்பதோடு தன் குண்டு உடம்பை வைத்து செய்யும் காமெடி ரசிக்க வைக்கிறது.
இயக்குநர் வெங்கட் பிரபு பாசமான அப்பாவாகவும் சிநேகா கண்டிப்பான அம்மாவாகவும் வந்து யதார்த்தமான நடிப்பால் கதாபாத்திரத்தை பலப்படுத்தியிருக்கிறார்கள்.
பிரணதிக்கு அப்பாவாக வருகிற இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன், தன் கதாபாத்திரம் மூலம், பெற்றோர்கள் குழந்தைகளின் திறமையை புரிந்து ஊக்குவிக்க தூண்டுகிறார்.
மேக்ஸ் நாய் தன்னிடம் மாட்டிக்கொள்ள அதை நல்ல மேக்ஸிமம் ரேட்டுக்கு விற்க முயற்சித்து பல்பு வாங்கும் யோகிபாபு சற்றே கலகலப்பூட்டியிருக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் வருகிற கோமல் சர்மா, டெல்லி கணேஷ், ‘கவிதாலயா’ கிருஷ்ணன், சாய் தீனா உள்ளிட்டோரின் நடிப்பு கச்சிதம்.
வீணையிசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா தன் இசை மூலம் பாடல்களுக்கு இதம் கூட்டி, காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார்.
‘ஷாட் பூட் த்ரீ’ – குழந்தைகளோடு தியேட்டருக்கு போகலாம்; குதூகலமாய் திரும்பலாம்.