பணத்துக்காக கொலை செய்பவன் மனதில் பாசம் நேசம் பற்றிக் கொண்டால், ஈவு இரக்கம் தொற்றிக் கொண்டால் என்னவாகும்? என்ற ஒன்லைனில் ‘சத்தமின்றி முத்தம் தா.’
தொழில்முறை கொலைகாரரான ஸ்ரீகாந்த் ஒரு பெண்ணைக் கொலை செய்ய கட்டுக் கட்டாய் பணம் பெற்றுக் கொள்கிறார். பின்னர் அவள் யார் எவர் என அறிந்து கொண்டபின் அவளை கொலை செய்வதை தவிர்த்து, அவளை கொலை செய்ய தன்னை ஏவி விட்டவர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றப் போராடுகிறார். அதன் விளைவுகள் என்ன என்பது கதை.
கொலைகார ஸ்ரீகாந்த் அவளைக் காப்பாற்ற நினைப்பது ஏன்? அவளை கொலை செய்ய திட்டமிடுவது யார்? அதற்கான காரணம் என்ன? இதற்கெல்லாம் விடை சொல்கிறது திரைக்கதை. இயக்கம் ராஜ் தேவ்
எதிராளிகளை சதக் சதக்கென குத்தும்போது, சரக் சரக்கென கழுத்தை அறுக்கும்போது அதற்கேற்ற கொலை வெறியை கண்களில் கச்சிதமாக காட்டுகிற ஸ்ரீகாந்த், பள்ளிக் கால தோழிக்கு கனிவான கணவனாக மாறும்போது தன்மையான நடிப்பால் கவர்கிறார்.
கொலை செய்யக் குறி வைத்தவர்களால் காரில் அடிபட்டு, பழைய நினைவுகளை மறந்து தன் கணவன் யாரென புரியாமல் குழம்பி மன உளைச்சலுக்கு ஆளாகும் கனமான கதாபாத்திரத்திற்கு தேர்ந்த நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார் பிரியங்கா திம்மேஷ். மேடத்துக்கு லிப் லாக் சீன்களும் உண்டு. அதையும் இனிமையாக செய்திருக்கிறார்.
மனைவியின் பெயரிலிருக்கும் சொத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகிற வியானின் வில்லத்தனத்திற்கு பாஸ்மார்க்கில் பாதியைக் கொடுக்கலாம்.
வியானுக்கு உடற்சுகம் தருபவராக நிஹாரிகா. அவர் தாராளமாய் கவர்ச்சி காட்ட பாடலொன்றும் இருக்கிறது.
ஜுபின் இசையில், ஆண்ட்ரியா குரலில் ‘செம்பரம்பாக்கம் ஏரி அளவு’ பாடலில் கிக் அதிகம். பின்னணி இசை காட்சிகளின் தேவையை நிறைவு செய்திருக்கிறது.
ஒளிப்பதிவு நேர்த்தி.
பரபரப்பான கதைதான். அதற்கு இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருந்தால், ‘சத்தமின்றி முத்தம் தா’, தியேட்டர்களில் ‘வசூலை மொத்தம் தா’ என வாரிக் குவித்திருக்கலாம்.