வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் நம் மக்களுக்கெதிராக நம் மக்களே செய்த கொடுமைகளின் பட்டியலும் அரசியல்வாதிகளும், அரசாங்கமும் செய்த துரோகங்களின் பட்டியலும் நீள….மாக இருப்பதை பார்க்கலாம்.
மேற்குத் தொடர்ச்சி மலை வாழ் மக்களின் விளை நிலங்களை அபகரித்து தொழிலதிபர்களுக்கும் சாமியார்களுக்கும் ஆளும்கட்சியினரின் நிறுவனங்களுக்கும் குத்தகைக்கு விடப்பட்டதும் அத்தைகைய கொடுமைகளில் ஒன்று.
அதை மையப்படுத்தி, கிரைம் திரில்லர் ஸ்டைலில் திரைக்கு வந்திருக்கிறான் ‘S /O காலிங்கராயன்.’
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்கும் போராடும் வாலிபர் ஒருவர் மலை கிராமப் பெண்ணின் உதவியால் உயிர் பிழைக்கிறார். அவருக்கு தான் யார் என்பது மறந்துவிடுகிறது. அந்த கிராமத்தில் பெண்கள் கடத்தப்பட்டு கொல்லப்படுகிற கொடூரமும், மக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான சதித் திட்டமும் நடக்கிறது.
எல்லாவற்றுக்கும் முடிவு கட்டவும், தன்னை யார் என மறந்து போயிருக்கும் வாலிபரை சுட்டது யார், அதற்கு காரணம் என்ன என்பதை கண்டறியவும் காவல்துறை உயரதிகாரி மாதேஸ்வரன் களமிறங்குகிறார்.
சமூகவிரோதச் செயல்களைச் செய்கிறவர்கள் அரசியல் பலம் கொண்டவர்களாக இருக்க, அவர்களை மாதேஸ்வரனால் வேட்டையாட முடிந்ததா இல்லையா, வாலிபருக்கு நடந்தது என்ன என்பதை விறுவிறுப்பு குறையாத திரைக்கதையில் பார்க்க முடிகிறது.
கதாநாயகனாக உதய கிருஷ்ணா அக்கம் பக்கத்தில் பார்க்கிற எளிமையான மனிதர்களைப் போல் இருக்கிறார். ஊருக்கு நல்லது செய்வதை நோக்கமாக கொண்ட ஜமீன் காளிங்கராயனின் மகனாக, கதையின் தேவைக்கேற்ப உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சி வசப்பட்டும் நிறைவாக நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக வருகிற, இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிற பாரதிமோகன் சமூக விரோதிகளை அழிப்பதில் வருகிற தடைகளைத் தகர்த்து, துணிச்சலாக தன் துப்பாக்கிக்கு வேலை கொடுப்பது படத்தின் விறுவிறுப்புக்கு உதவுகிறது. அவரது வரிகளிலும் இசையிலும் அமைந்த ‘கூவாதோ பாடாதோ’, ‘நாட்டுக்கோழி காத்திருக்கேன்’ பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
காளிங்கராயனான வருகிற அருள் செழியன் காட்டும் கம்பீரம், கதாநாயகி தென்றல் காட்டும் கனிவு, சித்த மருத்துவராக வருகிற ஆனந்த பாபுவின் மக்கள் நலப் போராட்டம் தனித்து தெரிகிறது. மற்றவர்களும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்தை தரம் உயர்த்தியிருக்கின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்கள் நம் விளைநிலங்களை அபகரிக்கும் கொடுமையான செயல்களின் பிரதிபலிப்பாக கதைக்களத்தை உருவாக்கி கற்பழிப்பு, கொலை, சீன சாமியாரின் நரபலி என கலந்துகட்டி படத்தை கமர்சியல் பேக்கேஜாக தந்திருக்கிற இயக்குநர் பாரதிமோகன் விவசாயத்தின் மகத்துவத்தை உணர்த்தி, உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கருத்தை உரக்கச் சொல்லியிருப்பதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்!