ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் ‘சைரன்.’
மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் பிப்ரவரி 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
நிகழ்வில் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் பேசியபோது, ”இந்தப் படம் எனக்கு கனவு மாதிரி. முதலில் ரூபன் என் காலேஜ் சீனியர். அவர் சொல்லி அனுப்பி தான் இரும்புத்திரை படத்தில் ரைட்டராக மாறினேன். பின்னர் இயக்குநராக வேண்டி அலைந்து கொண்டிருந்தேன். ரூபன் அண்ணா ஒரு நாள் ரவி சார் எப்படி இருப்பார் என்றார். உடனே அவரிடம் அனுப்பி வைத்தார், எல்லாமே நடந்தது. அவர் தான் சுஜாதா மேடத்திடமும் என்னை அறிமுகப்படுத்தினார். ரவி சாருக்கு கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்து உடனே ஆரம்பிக்கலாம் என்றார். ரவி சார் என்னை முழுமையாக நம்பினார். நடிக்கும் போது என்ன எடுத்தீர்கள் என்று கூட அவர் கேட்டதில்லை. அவர் வைத்த நம்பிக்கையை உடைத்துவிடக்கூடாது என்பது தான் எனக்கு முக்கியமாக இருந்தது.
புது இயக்குநர்கள் பெரிய ஹீரோவுக்கு செய்யும் படம் ஜெயிக்க வேண்டும். அப்போது தான் இனி புது இயக்குநர்கள் பலர் வர முடியும். அழகம் பெருமாள் சாரை ஷீட்டிங்கு முதல் நாளில் தான் கூப்பிட்டேன், எனக்காக வந்தார். கனி அண்ணனிடம் கதை சொன்ன போதே, இந்தக்கதை ஹிட்டுடா என்றார். இந்தக்கதையைத் தாங்கும் ஜெயம் ரவி இருக்கிறார், படம் ஜெயிக்கும் என்றார் நன்றி அண்ணா. ஜீவி அண்ணாவின் மெலடி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் மட்டும் தான் எனக்குத் தெரிந்த இசையமைப்பாளர், என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். இந்தப்படத்திற்காக 20 ட்யூன் தந்துள்ளார். அவருக்கு நன்றி.
செல்வா, வேறு வேறு களங்களில் படம் செய்தவர். இந்தப்படத்தை அவ்வளவு லைவ்வாக எடுத்துத் தந்தார். திலீப் மாஸ்டர் கதைக்குள்ளேயே யோசிப்பார், எனக்காக நிறையச் செய்தார்.
இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே தங்கள் படம் போல வேலை செய்தார்கள். கீர்த்தி அற்புதமாக நடித்துள்ளார். அனுபமாவிற்கு முக்கியமான ரோல். தமிழில் இது அவங்களுக்கு முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.
நடிகர் ஜெயம் ரவி பேசியபோது, ”முதன் முதலில் எடிட்டர் ரூபனிடம் இருந்து தான் இந்தப் படம் ஆரம்பித்தது. அடங்கமறு இயக்குநரை அவர்தான் அனுப்பி வைத்தார். அந்தப்படம் பெரிய வெற்றி. இந்தப்படமும் கண்டிப்பாக வெற்றியடையும்.
இந்தியாவின் மிகச்சிறந்த மியூசிக் டைரக்டர்களில் ஒருத்தர் ஜீவி பிரகாஷ்.
இந்தப்படத்தில் பெண் கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஹீரோவுக்கு சரிசமமாக நிற்க வேண்டும். கீர்த்தி சரியாக இருப்பார் என்று நினைத்தோம், அதை நிரூபிக்கும்படி நடித்துள்ளார். மிகச்சிறந்த உழைப்பாளி.
சமுத்திரகனி அண்ணனுக்கு இன்னும் ஒரு முக்கியமான பாத்திரம். நிஜத்தில் எப்போதும் சமூக கருத்துக்கள் சொல்பவர், அவரை அதற்கு நேர்மாறாக நடிக்க வைத்துள்ளோம்.
அழகம் பெருமாள் சார் அடங்கமறு படத்தில் அவருடன் நடிக்க ஆரம்பித்தேன். அவருடனான ஜர்னி இன்னும் தொடர வேண்டும். இயக்குநரும் செல்வாவும் டிவின்ஸ் மாதிரி அத்தனை ஒற்றுமையாக இருப்பார்கள். அவர்கள் உழைப்பை மக்கள் பாராட்டுவார்கள். இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இன்னும் நிறைய மேடைகளில், வெற்றி மேடைகளில் அவரை நீங்கள் பார்ப்பீர்கள்.
யோகிபாபு நானும் டிவின்ஸ் மாதிரி ஒன்னாவே இருந்தோம். கோமாளி படம் மாதிரி இந்தப்படத்திலும் அழகான டிராவல். மக்கள் ரசிப்பார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ரசியுங்கள்” என்றார்.