ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் மூவரும் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்.’
மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் என ரசிகர்களைக் கவரும் அம்சங்களைக் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் வினய் பரத்வாஜ், ‘‘இது என்னுடைய முதல் தமிழ்ப் படம். நான் இந்தியாவை விட்டு சென்று 18 வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கப்பூரில் வசிக்கிறேன். நல்ல பேங்க்கிங் வேலை இருந்தது. எனக்குப் பிரியமான ஒருவரை கேன்சரால் இழந்து விட்டேன். அதனால், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த யூடியூப்பில் வீடியோக்கள் போட ஆரம்பித்தேன். சென்னையிலும் இது தொடர்பாக பல நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். நல்ல வரவேற்பு இருந்தது. சிங்கப்பூரில் ஸ்டார் விஜய், கலர்ஸ் தமிழுக்காக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினேன். அதன் பிறகு குறும்படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. எனக்குள் இருந்த இயக்குநரை அப்போதுதான் உணர்ந்தேன்.
மீடியா குளோபல் ஒன் நிறுவனம் கோவிட் சமயத்தில் எனக்கு கால் செய்து லண்டனில் செய்வது போன்ற ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டார்கள். வழக்கமான த்ரில்லர் கதைகளைப் போல இல்லாமல் வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
திரில்லர், மிஸ்ட்ரி, காதல் என எல்லாமே இதில் உண்டு. இசை எனக்குப் பிடிக்கும். அதனால்தான் ஐந்து இசையமைப்பாளர்கள் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். வித்தியாசமான ரிச்சர்ட் ரிஷியையும், வித்தியாசமான யாஷிகாவையும் இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள். புன்னகைப் பூ கீதா மலேசியாவில் பாப்புலரான ஆர்.ஜே., தயாரிப்பாளர் என்றாலும், அவரை நடிகையாக எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படத்தில் ஏற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்” என்றார்.
நடிகர் ரிச்சார்ட் ரிஷி, “நிறைய சின்னப் படங்கள் ஜெயித்திருக்கிறது. நிறைய பெரிய படங்கள் தோற்றிருக்கிறது. இந்தப் படத்தில் நிறைய புது விஷயங்களைச் செய்திருக்கிறோம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். கண்டிப்பாக தியேட்டரில் இந்தப் படத்தைப் பாருங்கள்” என்றார்.
நடிகை யாஷிகா ஆனந்த், ‘‘நான் மிகப்பெரிய த்ரில்லர் ஃபேன். அதனால், இந்த கதை பிடித்து நடித்தேன். நிஜத்தில் நான் எப்படி மாடலிங் செய்கிறேனோ அப்படி தான் இந்தப் படத்திலும் மாடலாக நடித்திருக்கிறேன். பாடல்களும் இசையும் எனக்குப் பிடித்துள்ளது” என்றார்.
படத்தின் தயாரிப்பாளர், நடிகை ‘புன்னகை பூ’ கீதா, ‘‘படத்தில் யாஷிகா ஒரு காட்சியில் பெட்டிக்குள் அவர் மடங்கி உட்கார வேண்டும். அவர் காலில் ஏற்கனவே ஆபரேசன் செய்து பிளேட் வைக்கப்பட்டுள்ளது. அப்படி உட்காருவது மிகவும் கஷ்டம். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வெகு நேரம் உட்கார்ந்து இருந்தார். அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடித்தார். படம் உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.
தயாரிப்பாளர் ஜெயக்குமார், ‘‘இந்தப் படத்தை முழுக்க லண்டனில் படமாக்கினோம். 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தினோம். நிறைவான ஒன்றாக இருந்தது. இயக்குநர் வினய் எதையும் திட்டமிட்டு செய்யக் கூடியவர். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டார் என்றுதான் சொல்வேன். கெளதம் மேனனையும் நாங்கள்தான் அறிமுகம் செய்தோம்” என்றார்.
பாடகியும் இந்தப் படத்தின் இசையமைப்பாளருமான தர்ஷனா ‘‘பல்லேலக்கா பாடல் மூலம் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பித்தது. அதன் பிறகு, ‘கருப்பு பேரழகா’, ‘ஆட்டக்காரா’ என கடந்த 17 வருடங்களாக பாடகியாக மட்டுமே இருந்துள்ளேன். இசையமைப்பாளராவேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதை இந்த படம் நிறைவேற்றியுள்ளது. கணவன், மனைவிக்கு இடையே ஒருவருக்கு மட்டும்தான் காதல் இருக்கிறது. அதற்கேற்ப இரண்டு பாடல்கள் இசையமைத்தேன். உங்களுக்கு அந்தப் பாடல்கள் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
‘திரெளபதி’ பட இயக்குநர் மோகன்.ஜி. ‘‘என்னுடைய ஹீரோ ரிச்சார்ட் சாருடைய படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி. இதுபோன்ற விழா அவருக்கு நடக்க வேண்டும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என நான் நீண்ட நாள் காத்திருந்தேன். கடினமான ஒரு சமயத்தில் நான் போய் அவரிடம் நின்றபோது எனக்கு உதவுவதற்காக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படம் ரிலீஸின் போதும் எதிர்பாராத சில பிரச்சினைகள் வந்தது. அப்போதும் நான் அவரிடம்தான் போனேன். எனக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக நின்றார். அப்படி உருவானதுதான் ‘திரெளபதி.’ அவர் இல்லை என்றால் ‘திரெளபதி’ இல்லை. அந்தப் படம் 18 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. அதேபோல, அடுத்த படமான ‘ருத்ரதாண்டவம்’ படமும் 13 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. மூன்றாவது படம் ஒரு கேப் விட்டு பண்ணலாம் என்றார். அதனால்தான் செல்வா சாருடன் ‘பரகாசுரன்’ செய்தேன். நானும் ரிச்சரட் சாரும் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறோம். அதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வரும். சினிமாவில் நான் ஐந்து வருடம் பயணித்தது அவரால்தான். திடீரென அவர் யாஷிகாவுடன் ஃபோட்டோ போட்டதும், ‘என்ன சாருக்கு கல்யாணமா?’ என நிறையப் பேர் என்னிடமும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அவரிடம் நான் கேட்டபோது, சிரித்தார். பின்புதான் படத்திற்கான புரோமோஷன் எனப் புரிந்தது. ரிச்சார்ட் சாரை இது போல திரையில் ஸ்டைலிஷாகப் பார்ப்பது மகிழ்ச்சி” என்றார்.