சாதி வெறியர்கள் எதைச் செய்கிறார்களோ இல்லையோ, சாதி மாறி காதலிப்பவர்களை அறுத்துப் போடுவதை மட்டும் தவறாமல் செய்வார்கள். ‘ஆணவக் கொலை’ என்ற அந்த கொடூரம் இந்தக் காலத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கத்தான் செய்கிறது. ‘செம்பியன் மாதேவி’ கதையும் அதே விதமான சம்பவங்களையே சுற்றிச் சுழல்கிறது.
இளைஞன் வீரா தாழ்ந்த சாதிப் பெண் மாதேவியைக் காதலிக்கிறான். வீராவின் சித்தப்பா சாதி வெறி பிடித்தவர். ஏற்கனவே இதேபோன்ற காதல் விவகாரத்தில் ஒரு இளைஞனை வெட்டிக் கொன்றவர். தன் அண்ணன் மகன் கீழ் சாதிப் பெண்ணைக் காதலித்தால் சும்மா விடுவாரா? அவர் அரிவாளை கூர் தீட்டிக் கொண்டு பாய, வீரா அவரை எதிர்க்க, அந்த மோதலில் யாரெல்லாம் ரத்தம் சிந்தினார்கள், யாரெல்லாம் உயிரிழந்தார்கள் என்பது கிளைமாக்ஸ். நடிப்பு, இசை, இயக்கம்: லோக பத்மநாபன்
வீராவாக வருகிற லோக பத்மநாபன் கிராமத்து இளைஞன் பாத்திரத்துக்கு தோற்றத்தால் பொருந்திப் போவதோடு, காதல் காட்சிகளில் அளவாகவும் சாதி வெறியர்களை கொதித்துக் கொந்தளித்து பதம் பார்க்கும் காட்சிகளில் தேவையான ஆக்ரோஷத்துடனும் களமாடியிருக்கிறார்.
களையான முகமும் கள்ளமில்லாச் சிரிப்பும் மாதேவியாக வருகிற அம்சரேகாவை அம்சமாக காட்டுகிறது. ஏற்ற பாத்திரத்துக்கேற்ப காதல் உணர்வைக் காட்டுவதாட்டும் காம உணர்வுக்குள் விழுவதாகட்டும் ஆரம்பக் காட்சியில் தன்னைச் சுற்றிவரும் வீராவிடம் அனல் வீசுவதாகட்டும் நடிப்பில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. குரூர மனிதர்களிடம் சிக்கிச் சீரழியும் காட்சியில் பரிதாபத்தையும் அள்ளுகிறார்.
கதையின் மற்றொரு நாயகியான ரெஜினா வலுக்கட்டாயமாக கீழ் சாதி இளைஞனைக் காதலிப்பது, அவன் ஆணவக் கொலை செய்யப்பட்டபின் கலங்கிக் கதறுவது என நேர்த்தியாக நடித்திருக்க. சித்தப்பாவாக வருகிற மணிமாறன் சாதி வெறியராக மிரட்டலான நடிப்பைத் தர முயற்சித்திருக்கிறார். மற்றவர்களும் கதையின் தன்மையுணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஜெய்பீம் மொசக்குட்டி, மாற்றான் மனைவிப் பிரியராக இடையிடையே வந்துபோவது படத்தில் காமெடி இல்லையென்ற குறையை ஓரளவு தீர்த்து வைக்கிறது.
லோக பத்மநாபன் இசையில் பாடல்கள் ரசித்துக் கேட்கும் ரகம். பாடல் காட்சிகளும் மனதுக்கு இதம் தரும்படி படமாக்கப் பட்டுள்ளன.
ஒளிப்பதிவாளர் கே.ராஜ சேகரின் கேமரா கதைக்களத்தின் தேவையை நிறைவேற்றியிருக்கிறது.
இயக்குநர் சாதி வெறி, ஆணவக் கொலை என புதிய அனுபவம் ஏதும் தராத கதைக்களத்தை கையிலெடுத்திருந்தாலும், சொல்ல வந்ததை சரியாக சொல்லியிருப்பதற்காக பாராட்டத்தான் வேண்டும்.
Rating 3 / 5