மூத்த பத்திரிகையாளர் கோடங்கி ஆபிரகாமின் மகன் சந்தோஷ் பிரபாகர் நடிகராக அறிமுகமான, வெள்ளி விழா நாயகன் மோகன் நடித்த ‘ஹரா திரைப்படம் இன்று (ஜூன் 7; 2024) வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சந்தோஷ் பிரபாகரிடம், முதல் பட வாய்ப்பு, அடுத்தடுத்த படங்கள் பற்றி கேட்டோம்… “அப்பா திரையுலகில் செய்தியாளராக இருந்தாலும் சிபாரிசு செய்வதை விரும்ப மாட்டார். ‘ஹரா’ பட இயக்குனர் விஜய்ஸ்ரீஜி அவர்கள் அலுவலகத்திற்கு ஆடீஷனுக்கு போய் சின்ன ரோலில் நடிக்க தேர்வானேன். ‘ஹரா’ எனக்கு முதல் படமல்ல. நான் நடிக்கத் தேர்வானது இதே இயக்குநர் விஜய்ஸ்ரீஜியின் ‘பப்ஜி’ படத்திற்காக. அதில் மிகச்சிறிய வேடம். அதில் எனது நடிப்பை பார்த்து அதன் பின்னர்தான் ‘ஹரா’ வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா நாயகன் மோகன் சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. இதற்கு காரணமான விஜய்ஸ்ரீஜி அவர்களுக்கு நன்றி. ஹரா படம் சொல்லவேண்டிய கதை. விஜய்ஸ்ரீஜி மிக அழகாக எங்களை பயன்படுத்தியிருக்கிறார்.
அதையடுத்து, பெயரிடப்படாத இன்னொரு படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறேன். அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும், கேட்கும் ஒரு சம்பவம்தான் இந்த படத்தின் மையக்கரு.
பொள்ளாச்சியில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அந்த படத்தை இயக்கி வருபவர் திரையுலகில் எல்லாருக்கும் அறிமுகமானவர்தான் என்றாலும் அவரின் அறிமுக படம் என்பதால் படத்தின் பெயரும், இயக்குநர் பெயரும் இப்போதைக்கு வேண்டாமே” என்றவர்,
”அந்த படத்தில் வெண்பா எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இன்ஸ்டா பிரபலம் அஞ்சனா எனக்கு தங்கையாக நடித்து இருக்கிறார். பொன்வண்ணன் சார், மைம் கோபி சார், சத்யா அண்ணன் ஆகியோருடன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பில் இன்னும் பல பிரபலங்கள் இணையவிருக்கிறார்கள்” என்றார்.