படிக்கிற வயதில் தவறான சிந்தனைகளில் மிதப்பவர்களால் ஏற்படும் விபரீதங்களில் சிறிதளவு எடுத்துச் சொல்லியிருக்கும் ‘சிறகன்.’
கதையின் ஆரம்பத்தில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையில், சூழ்நிலையில் இருக்கும்படியான சில கேரக்டர்களை காட்டுகிறார்கள்.
கோமாவில் இருக்கிற மகளை வைத்துக் கொண்டு மன வேதனையில் துடிக்கிற வழக்கறிஞர் காளிதாஸ், காவல்துறை முன் கொலை குற்ற விசாரணைக்காக நிற்க வேண்டிய சூழ்நிலை.
தன்னிடம் படிக்கும் மாணவனின் பாலியல் உணர்வின் அத்துமீறலால் பாதிப்படுகிற ஆசிரியை கயலுக்கு, வழக்கறிஞர் காளிதாஸின் மகள் நித்யா ஆறுதலாக ஆதரவாக இருக்கிறாள். அதனால் அவள் கோமா நிலைக்கு போகிற சூழ்நிலை.
அரசியல் செல்வாக்கோடும் பணபலத்தோடும் கெத்தாக வலம்வருகிற ஆசாமி சுந்தருக்கு, காணாமல் போன தனது கேடுகெட்ட மகனைத் தேட வேண்டிய சூழ்நிலை.
மானம் பறிபோனதால் தற்கொலை செய்துகொண்ட இளம் பெண் கயலின் போலீஸ்கார அண்ணன், தங்கையின் மரணத்துக்கு காரணமானவர்களை தேடிக் கொண்டிருக்கிற சூழ்நிலை.
இந்த நான்கு தரப்புக்கும் என்ன தொடர்பு என்பதுதான் கதையிலிருக்கிற விறுவிறுப்பு, சுறுசுறுப்பு, பரபரப்பு எல்லாமே…
காளிதாஸாக கஜராஜ், நித்யாவாக பெளசி ஹிதாயா, கயலாக ஹர்சிதா ராம், காவல்துறை உயரதிகாரி இன்பாவாக வினோத் ஜி டி, தவறான வழியில் போகிற மகனை பெற்றதற்காக மன உளைச்சலுக்கு ஆளாகிற தந்தையாக ஜீவா ரவி என கதையின் முதன்மை கதாபாத்திரங்களை ஏற்றிருப்போர் கதைக்கேற்ற நடிப்புப் பங்களிப்பைத் தந்திருக்க, கதையின் திருப்பத்துக்கு உதவியிருக்கிறது கயலின் கணவராக வருகிற ஆனந்த் நாக்கின் நடிப்பு!
மெல்லமாய் நகரும் காட்சிகளைக்கூட பின்னணி இசையால் கவனிக்க வைத்திருக்கும் ராம் கணேஷ் கே, ‘எனை மறந்தேனே’ பாடலுக்கு தந்திருக்கும் இசையில் தாலாட்டின் இதமிருக்கிறது.
ஹைப்பர் லிங்க், நான் லீனியர் என திரைக்கதையை யோசித்த இயக்குநர் வெங்கடேஷ்வராஜ் அதற்கேற்றபடி காட்சிகளை வெட்டிக் கோர்க்கும் எடிட்டர் பொறுப்பையும் ஏற்று அந்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்.
நடிகர், நடிகைகளில் பரிச்சயமான முகங்கள் அவ்வளவாய் இல்லையென்றாலும் திரைக்கதையிலிருக்கிற விறுவிறுப்பு அதை சமாளித்து விடுகிறது.
சிறகன் – வெற்றியென்கிற வானத்தில் சிறகடிக்கத் தகுதியானவன்!