அடர்ந்த காட்டையும் ஆன்மிகத்தையும் இணைத்திருக்கும் கமர்ஷியல் படம்.
திருமணமாகி பல வருடங்களாக குழந்தையில்லாத விஜய் பிரசாத், காயத்ரி தம்பதி பரந்து விரிந்த காட்டுப் பகுதியில் இருக்கிற கிராமத்தில் வசிக்கிறார்கள். விஜய் காட்டில் சுற்றித் திரிந்து தேன் எடுத்து, விற்பனை செய்து சம்பாதிக்கிறார்.
ஒருமுறை அவர் தேனெடுக்க காட்டுக்குள் போகும்போது, பச்சிளங் குழந்தையொன்று அழுதபடி, யாருடைய ஆதரவும் இல்லாமல் கிடப்பதை பார்க்கிறார். குழந்தையை வீட்டுக்கு தூக்கிப்போக, அது அவர்களின் சொந்த வாரிசுபோல் வளர்கிறது.
இது ஒருபுறமிருக்க, பணத்துக்காக யானை உள்ளிட்ட காட்டு விலங்குகளை வேட்டையாடுவதை தொழிலாக வைத்திருக்கிற அயோக்கியன் ஒருவருக்கும் விஜய்க்கும் பகை உருவாகிறது. அந்த அயோக்கியனின் சூழ்ச்சியால் விஜய் ஊர் மக்களுக்கு பகையாளியாகிறார்.
அப்படியே நாட்கள் நகர ஊருக்குள் புலி நடமாட்டம் அதிகரிக்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர அரசாங்கம் தடை விதிக்கிறது. அதனால், மாலை போட்டிருக்கும் பக்தர்கள் சபரி மலைக்கு போக முடியாமல் தவிக்கும் சூழ்நிலை. புலி ஊருக்குள் வருவதற்கு விஜய்தான் காரணம் என மக்களும், ஐயப்ப பக்தர்களும் பழி சுமத்த, அந்த பழியிலிருந்து தன்னை மீட்க ஐயப்பனிடன் வேண்டுகிறார் விஜய்.
அவரது வேண்டுதலை ஐயப்பன் நிறைவேற்றினாரா இல்லையா என்பதே மீதிக் கதை… ஐயப்பனின் மகிமையை எடுத்துச் சொல்லும் இந்த படத்தை இயக்கியிருப்பவர் ஐய்யப்பன்!
கதையின் நாயகன் விஜய் பிரசாத்தின் தாடி மீசை அடர்ந்த முரட்டு தோற்றம், காட்டுப்பகுதியில் தேனெடுக்கிற நபர் வேடத்திற்கும் ஆக்சன் காட்சிகளுக்கும் சரியாய் பொருந்தியிருக்கிறது. காட்டு விலங்குகள் மீது நேசம், குழந்தையில்லா ஏக்கம், குழந்தை கிடைத்தபின் அதன் மீது காட்டும் பாசம் என இயல்பான நடிப்பால் கவர்கிறார்.
குழந்தையில்லா தம்பதி, காடு, ஆன்மிகம் என நகரும் கதைக்குத் தொடர்பில்லாமல், வீடு கட்ட லோன் வாங்கும் ஒருவர் அதை கட்ட முடியாமல் வேதனைக்கு ஆளாவதுபோல் இன்னொரு கதை தனி டிராக்கில் பயணிக்கிறது. அதில் நடித்திருக்கிற சார்லியின் நடிப்பு பரிதாபத்தை அள்ளுகிறது.
விஜய் பிரசாத்துக்கு மனைவியாக வருகிற காயத்ரி ரெமா எளிமையான நடித்திருக்க, வில்லனாக வருபவரிலிருந்து மற்ற அனைவரும் அவரவர் பங்களிப்பை நேர்த்தியாய் தர முயற்சித்திருக்கிறார்கள்.
வீட்டில் மனைவிக்கு அடங்கியவர், வெளியில் அலட்டலான அரசியல்வாதி என உருவாக்கப்பட்ட பாத்திரத்தில் விஜய் டிவி ராமர் ஓரளவு கலகலப்பூட்டுகிறார்.
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன் காட்டின் பிரமாண்டத்தை அழகாக காட்டியிருக்க, அரவிந்த் பாபுவின் இசையில் நிறைவுக் காட்சியின் ஐய்யப்பன் பாடலில் பரவசம் வழிகிறது.
ரூபன் – ஐய்யப்ப பக்தர்களை கவர்வான்.