மனிதர்களுக்குள் பெரும்பாலும் வெளியில் சொல்லமுடியாத, சொன்னால் சிக்கல்களை உருவாக்கிவிடுகிற, வெளியில் தெரிந்தால் வாழ்க்கையையே சிதைந்துவிடுகிற ரகசியம், அந்தரங்கம் என ஏதோவொன்று இருப்பது சகஜமான விஷயம். அதை மையப்படுத்திய படைப்பாக ‘ரிங் ரிங்.’
நண்பர்கள் நான்கு பேர், அதில் மூன்று பேர் திருமணமானவர்கள். ஒருவர் காதலியோடு சேர்ந்து வாழ்பவர். நான்கு பேரில் ஒருவருக்கு பிறந்தநாள். அதை கொண்டாடுவதற்கான சந்திப்பில் மூன்று பேர் ஜோடியாக, ஒருவர் தனியாக என எழு பேர் கூடுகிறார்கள். உற்சாகமாக சாப்பிட அமர்கிறார்கள்.
ஒருவர், விளையாட்டுத்தனமாக ஒரு விளையாட்டைத் துவங்கி வைக்கிறார். அதன்படி போனில் யாருக்கு என்ன மெசேஜ் வந்தாலும் போட்டோ, வீடியோ வந்தாலும் அதை ஒளிவு மறைவின்றி எல்லோரிடமும் காட்ட வேண்டும்; போன் வந்தால் ஸ்பீக்கர் ஆன் செய்து அனைவருக்கும் கேட்கும்படி பேச வேண்டும்.
விளையாட்டு ஆரம்பிக்கிறது. ஒவ்வொருவருக்கும் வருகிற போட்டோக்கள், மெசேஜ்கள், போன் கால்கள் மூலம் ஒவ்வொருவரின் அந்தரங்க விஷயங்கள், ரகசியங்கள் வெளிப்படுகிறது. அதன் மூலம் ஒவ்வொரு விதத்தில் தவறானவர்கள் என்பது தெரிவருகிறது. அது நண்பர்களுக்குள், கணவன் மனைவிகளுக்குள், காதலன் காதலிக்குள் பிரச்சனையை உருவாக்குகிறது.
அப்படி அவர்களுக்கு என்னென்ன மெசேஜ் வந்தது? வந்த வீடியோக்கள் எப்படிப்பட்டவை? போனில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் யார் யார்? என்னென்ன பேசினார்கள்?
அத்தனையும் காட்சிகளாக விரிகிறது. அதில் சுவாரஸ்யத்துக்கு கொஞ்சம்கூட பஞ்சமில்லை. இயக்கம் சக்திவேல்
கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிற விவேக் பிரசன்னா – ஸ்வயம் சித்தா, பிரவீன் ராஜா – சாக்ஷிஅகர்வால், அர்ஜுனன் – சஹானா, டேனியல் ஆனிபோப் – ஜமுனா என நான்கு ஜோடிகளும் மகிழ்ச்சி, உற்சாகம், தயக்கம், பயம், பதட்டம், கோபம், இயலாமை, அவசரத்தனம், பக்குவம், ஆவேசம், கிளுகிளுப்பு, வக்கிரம் என பல்வேறு உணர்வுகளை சரியான விகிதத்தில் வெளிப்படுத்தியிருப்பது காட்சிகளை மேம்படுத்தியிருக்கிறது.
இவர்களைத் தவிர கெஸ்ட் ரோலில் வந்துபோகிற ஒருசிலரும் அவரவர் வேலைகளை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
படத்தின் பெரும்பகுதி ஒரேயொரு டைனிங் டேபிளிலேயே நடந்து முடிந்தாலும் இடையிடையே வந்துபொகிற பிளாஷ்பேக் காட்சிகள் விறுவிறுப்புக்கு கேரண்டி தருகின்றன.
பிரசாந்தின் ஒளிப்பதிவு, வசந்தின் பின்னணி இசை படத்துக்கு சேர்த்திருக்கின்றன. மனதுக்கு இதம் தருகிற பாடல் ஒன்றும் உண்டு.
நான்கு ஜோடிகள் ஓரு இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை முழு நீள திரைப்படமாக பார்ப்பது, அதுவும் எளிமையான நடிகர் நடிகைகளின் பங்களிப்பில் என்பது,
ஆட்டம் பாட்டம் அடிதடி என மசாலா படங்களை விரும்புகிறவர்களுக்கு ஒருவித சலிப்பைத் தரலாம். வித்தியாசமான படங்களை தேடித் தேடி ரசிக்கிறவர்களுக்கு புதிதாய் ஒரு அனுபவம் நிச்சயம்.