பிக்பாஸில் போட்டியாளர்களாக கலந்துகொண்டபோது காதல் ஜோடியாகி உலகத்தை பரபரப்பாக்கிய ஆரவ்வும் ஓவியாவும் சேர்ந்து நடித்துள்ள படம். உயரத்தில் கம்பீரம் காட்டுகிற ஆரவ் பல விதங்களிலும் கம்பீரம் காட்டுகிற யானை மீதேறி சிலபல சம்பவங்களைச் செய்திருக்கிற ‘ராஜபீமா.’
ஆரவ் சிறுவனாக இருக்கிறபோது, காயம்பட்ட ஒரு யானையை கனிவாக பார்க்கிறான்; யானை ஆரவ்வை அன்பாகப் பார்க்கிறது. அப்படி இருவருக்குள்ளும் உருவான ‘கெமிஸ்ட்ரி’யால் அந்த யானை, பலம் வாய்ந்தவனாக கருதப்படும் மகாபாரதப் பீமனின் பெயர் சூட்டப்பட்டு ஆரவ்வின் வீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்கிறது. ஒரு கட்டத்தில் பீமாவுக்கு மதம் பிடித்துள்ளதாக பொய் சொல்லி காட்டிலாக்கா அதிகாரிகள் யானையை பிடித்துக் கொண்டு போகிறார்கள். அவர்களிடமிருந்து பீமாவை மீட்டுக் கொண்டு வர களமிறங்கும் ஆரவ்வுக்கு, யானை ஒருவரின் சுயலாபத்துக்காக திட்டமிட்டுத் தூக்கப்பட்டிருக்கிற விவரம் தெரிகிறது.
அப்படி திட்டமிட்டது யார்? பீமாவால் அவருக்கு என்ன லாபம்? அவரிடமிருந்து பீமாவை காப்பாற்ற முடிந்ததா இல்லையா? என்கிற பல கேள்விகளுக்கான பதில்கள் அடுத்தடுத்த காட்சிகளில்…
கதைநாயகன் ஆரவ் அத்தனை பெரிய யானையை தன் சொல்லுக்கு கட்டுப்பட வைக்கிற கேரக்டருக்கு பொருந்தும்படியான வாட்டசாட்ட உடற்கட்டோடு லட்சணமான தோற்றத்திலிருக்கிறார். யானையை குழந்தை போல் பாசமாக வளர்ப்பது, அதை அதிகாரிகள் தூக்கிச் சென்றபின் மனம் உடைந்து பதறித் தவிப்பது, பெரியளவிலான ஆபத்தை சந்திக்கவிருக்கும் யானையைக் காப்பாற்ற மாஸ் ஹீரோ போல் மாறி அதிரடியில் ஈடுபடுவது என எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்து, காதல் காட்சிகளில் கச்சிதமாக நடித்துள்ளார். ஓவியாவுடன் ஒரு பாடலுக்கு அசத்தலாக ஆட்டமும் போட்டிருக்கிறார்.
ஹீரோவை காதலிக்கிற சிம்பிளான வேலையை சரியாக செய்திருக்கிறார் ஆஷிமா நெர்வால்.
தன் மகனுக்கு யானையைப் பிடிக்கிறது என்பதற்காக அதை வீட்டில் வைத்து வளர்க்கும் முடிவுக்கு வரும்போதாகட்டும், தான் திட்டிவிட்டதால் சாப்பிடாமலிருக்கிற யானையைச் சமாதானப்படுத்தி கெஞ்சிக் கூத்தாடி சாப்பிட வைப்பதாகட்டும் தனது தேர்ந்த நடிப்போடு அட்டடன்ஸ் போட்டிருக்கிறார் நாசர்.
கதையின் ஆரம்பத்தில், காமெடி பங்களிப்புக்காக வருகிறார் என்று நினைக்க வைத்து போகப்போக வில்லத்தனத்தை தன்னால் முடிந்தளவு வீரியமாகச் செய்திருக்கிறார் அமைச்சராக வருகிற கே எஸ் ரவிக்குமார்.
யோகிபாபு அமைச்சரின் மகன் என்ற பெயரில் செய்யும் ரகளைகளில் கொஞ்சமாய் சிரிக்க வைக்கிறது.
யாஷிகா ஆனந்த் கவர்ச்சியும் காட்டுகிறார்; கதையோடு கலந்தும் ஓடிவருகிறார்.
அருவி மதன், சயாஜி ஷிண்டே, ஜெயக்குமார் என மற்றவர்களும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கேரக்டர்களில் வந்துபோகிறார்கள்.
பீமாவாக நடமாடுகிற யானையின் நடவடிக்கைகள் மனதுக்கு புத்துணர்வு தரும்.
கதைக்களத்துக்கு பொருத்தமான வரிகளில் அமைந்த ‘தந்தத்துக் கொம்பனே கந்தனின் அண்ணனே’ பாடலையும், காதலர்கள் மகிழ்ந்திருக்கும் ‘மஞ்சனத்தி வாசத்துல’ பாடலையும் ரசிக்கும்படி தந்து, பின்னணி இசையில் திரைக்கதைக்கேற்ற விறுவிறுப்பை கொண்டு வர முயற்சித்திருக்கிறார் சைமன் கே கிங்.
யானைகள், புத்துணர்வு முகாம் என பாய்ந்து பரவும் காட்சிகளை அதன் தன்மையோடு சுருட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் சதீஷ்குமார்.
எடுக்கப்பட்டு நான்கைந்து வருடங்கள் கழித்து திரைக்கு வருவது படத்தின் பலவீனம்.
படத்தில் பட்டியலிட்டு சொல்ல சில குறைகள், லாஜிக் பற்றி யோசிக்காத காட்சிகள் இருந்தாலும் யானைகள் மனிதர்களால் எப்படியெல்லாம் அழிக்கப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டி, யானைகளை பாதுகாக்க ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிற இயக்குநர் நரேஷ் சம்பத்திற்கு யானையின் தும்பிக்கையால் பூமாலை அணிவித்துப் பாராட்டலாம்.
Rating 3.5 / 5