கதாநாயகியை மையப்படுத்தி சுழலும் படம். பெண்ணியவாதி ஒருவரை திருமணம் என்ற சிறைக்குள் தள்ள நடக்கும் முயற்சிகளும் அதை அவள் எதிர்கொள்வதுமாய் உருவான சுவாரஸ்யமான கதைக்களத்தில் ‘ரகு தாத்தா.’
இப்போது போல் பெண்களுக்கு பெரிதாய் சுதந்திரம், சம உரிமை என்பதெல்லாம் நடைமுறையில் இல்லாத, ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் துவங்கி சூடு பிடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது.
பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இளம்பெண் கயல்விழி, தான் வசிக்கும் ஊரில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்துப் போராடி பிரபலமாகிறாள். பேங்கில் பணிபுரியும் கயல்விழிக்கு சிறுகதை, நாவல் என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்.
‘பெண்ணாக இருக்கிற ஒரே காரணத்துக்காக யாருக்கும் எவருக்கும் கட்டுப்பட முடியாது; என் வாழ்க்கையை என் விருப்பப்படிதான் வாழ்வேன்’ என கெத்தாக வலம் வருகிற அவருக்கு, திருமணம் செய்துகொள்வதிலும் ஈடுபாடு இல்லாமலிருக்கிறது. அப்படிப்பட்ட கயல்விழி சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணத்துக்கு சம்மதிக்கிறாள்.
திருமணத்துக்கு தேதி குறித்தபின், தனக்கு கணவனாக வரப்போகிறவன் ஆணாதிக்க மனோபாவத்தில் உள்ளவன், பெண்கள் சுதந்திரமாக செயல்படுவதை விரும்பாதவன் என்பது தெரிகிறது.
திருமணத்தை நிறுத்த நினைக்கிறாள். அப்படி செய்தால் மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிற மனதுக்குப் பிடித்த உறவினர் மனம் உடைந்துபோவார் என்ற சூழ்நிலை. அதைக்கூட சமாளித்துக் கொள்ளலாம் என யோசிக்கும்போது, திருமணத்திலிருந்து தப்பிக்க வேண்டுமானால் தான் எதிர்க்கிற ஹிந்தியை கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகிறது.
இந்த நிலையில் கயல் என்ன முடிவெடுத்தாள்? நினைத்தபடி அவளால் திருமணத்தை நிறுத்த முடிந்ததா? வில்லங்கமும் விபரீதமுமான இந்த கதையை கலகலப்பு மசாலாவில் புரட்டிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுமன்குமார்.
கயல் விழியாக வருகிற ‘மகா நடிகை’ கீர்த்தி சுரேஷுக்கு ஹீரோ, ஹீரோயின் என இரண்டுமாக களமாடி படத்தை தூக்கிப் பிடிக்க வேண்டிய பொறுப்பு. அதை உணர்ந்து நடித்திருக்கிரார் பெண்ணுரிமை சிந்தனைகளை வெளிப்படுத்தும்போது அதற்கேற்ற துணிச்சலுடன் கெத்து காட்டும் அவர், திருமணத்தை நிறுத்த எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் தனக்கு காமெடியும் நன்றாகவே வரும் என நிரூபித்திருக்கிறார்.
பெண்கள் ஆண்களுக்கு ஒரு படி கீழேதான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு, பெண்ணியவாதியான கீர்த்தி சுரேஷின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவராக நாடகமாடுகிற கேரக்டரில் ரவீந்திர விஜய் சிரித்தபடியே செய்கிற வில்லத்தனம் கவர்கிறது.
திருமணத்தை நிறுத்துவதில் கீர்த்திக்கு தோழியாக வருகிற தேவதர்ஷினியின் பங்களிப்பும், பேங்க் மேனேஜராக வருகிற ராஜீவ் ரவீந்திரநாதன் தப்புத் தப்பாக தமிழ் பேசுவதும் கலகலப்பூட்டுகிறது.
‘நான் சாகுறதுக்கு முன்ன உன் கல்யாணத்தைப் பார்க்கணும்’ என்று சொல்லி பேத்தியை சென்டிமென்ட் அட்டாக் செய்கிற வேடத்தில் எம் எஸ் பாஸ்கர், முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயகுமார், ஆதிரா பாண்டிலெஷ்மி, ராஜேஷ் பாலச்சந்திரன், இஸ்மத் பானு, மிப்பு என மற்றவர்கள் ஏற்ற கேரக்டரில் சரியாக பொருந்தியிருக்கிறார்கள்.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கதைக்களத்தோடு இணைந்து பயணித்தாலும் மனதில் ஒட்ட மறுக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவு கச்சிதம்.
சீரியஸான கதையை ஓரளவு சிரித்து ரசிக்கும் விதத்தில் தந்துள்ள இயக்குநர், பல வருடங்கள் முன் நடக்கும் கதைக்கான கதைக்களத்தை அதன் தன்மையோடு கொண்டு வர பார்த்துப் பார்த்து உழைத்திருப்பது காட்சிகளில் தெரிகிறது.
கமர்ஷியல் அம்சங்கள் குறைவாக இருந்தாலும், ஒருவரின் விருப்பத்தை மற்றவரின் மீது திணிப்பது அது ஹிந்தியாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் அது எல்லாமே தவறு என சரியாக சொல்லியிருப்பதற்காக படக்குழுவுக்கு பாராட்டுக்கள்!