இந்தியாவின் பிரபல இதிகாசக் கதைகளில் ஒன்றான ராமாயணக் கதையின் அனிமேஷன் வடிவம் ‘ராமாயணம்: தி லெஜென்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா.’
கதை கிட்டத்தட்ட ராமர் வனவாசம் போவதற்கு சற்று முந்தைய காலகட்டத்தில் துவங்குகிறது. வனவாசம் போன இடத்திலிருந்து ராவணனால் சீதை கடத்தப்படுவது, அனுமன் துணையுடன் சீதையை மீட்க இலங்கை சென்றடைவது, ராவணன் தரப்புக்கும் ராமர் தரப்புக்கும் போர் நடப்பது, ராவணனையும் அவன் படைகளையும் அழித்து இலங்கையை விபீஷணன் வசம் ஒப்படைப்பது, தன் நாட்டிற்கு திரும்புவது வரை காட்சிகளாக விரிகிறது.
கனிவான முகத்துடன் ராமர் வலம் வர, ராவணன் ராட்சசனைப் போல் தோன்ற, கும்பகர்ணன் பிரமாண்டமாக எழுந்து நின்று போர் புரிய, அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்தெடுக்க என நாம் படித்த, படங்களில் சீரியல்களில் பார்த்த அனைத்தையும் அனிமேஷனில் பார்ப்பது மனதுக்கு உற்சாகம் தரும் விதத்தில் அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்கள் கார்ட்டூன்களாக நடமாடுவதும் போர்க்கள காட்சிகள் சுவாரஸ்யமாக நீள்வதும் குழந்தைகளை நிச்சயம் கவரும்.
முதன்மையான கதாபாத்திரங்களுக்கு செந்தில் குமார், டி.மகேஷ்வரி, பிரவீன் குமார், தியாகராஜன், லோகேஷ் உள்ளிட்டோர் காட்சிகளின் தன்மைக்கேற்ப குரல் கொடுத்திருக்க, கதையை இனிமையாக விவரிக்கிறது ரவூரி ஹரிதாவின் குரல்.
கதை எளிமையாக சித்தரிக்கப்பட்டுள்ளதும், சம்பவங்கள் சுருக்கமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் படத்தின் பிளஸ்.
உலகறிந்த ராமாயண கதையை 1993 காலகட்டத்தில் ஜப்பானை சேர்ந்த யூகோ சாகோ என்பவர் அனிமேஷன் படமாக உருவாக்க நினைத்து, சிலபல தடைகளைக் கடந்து நினைத்தபடி உருவாக்கி, படத்தை வெளியிட முடியாதபடி சில சிக்கல்கள் உருவாகி, பின்னர் 1997-ல் வெளியானது. அந்த படம் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கண்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு இப்போது 4 கே தரத்தில் வெளியாகியுள்ளது.