சைனு சாவக்கடன் மலையாளத் திரையுலகில் ஐந்து படங்களை இயக்கி, ‘சுப்ரீம் இயக்குநர்’ என்று அழைக்கப்படுகிறார். தமிழில் அவர் இயக்கியுள்ள முதல் படம் ‘ஆர்.கே.வெள்ளிமேகம்.’
இந்த படத்தில் விஜய் கௌரீஷ், ரூபேஷ் பாபு, சுனில் அரவிந்த், ‘சுப்பிரமணியபுரம்’ விசித்திரன், அதிரா முரளி, சார்மிளா, வின்சென்ட் ராய், ஆதேஷ் பாலா தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துவருகிற கொட்டாச்சி, சின்ராசு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சைக்கோ திரில்லர் சப்ஜெக்டில், கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் மே 31; 2024 அன்று மாலை நடந்தது.
நிகழ்வில், இயக்குநர் சைனு சாவக்கடன், தயாரிப்பாளர் சந்திரசுதா ஃபிலிம்ஸ் பி ஜி ராமச்சந்திரன், கதாநாயகன் விஜய் கௌரீஷ், இரண்டாம் கதாநாயகன் ரூபேஷ் பாபு, நடிகை சார்மிளா, இசையமைப்பாளர் சாய்பாலன் உள்ளிட்ட படக்குழுவினரோடு, சிறப்பு விருந்தினர்களாக சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, இந்திய ஜனநாயக கட்சியின் துணைத் தலைவர் ஆனந்த முருகன், சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அன்புச் செல்வன், தயாரிப்பாளர் ஏ ஆர் கே ராஜராஜா, தயாரிப்பாளர் ஆர் பி பாலா, நடிகர்கள் காதல் சுகுமார், அப்புக்குட்டி, ‘ராட்சசன்’ சரவணன், நடிகை களவாணி தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் சைனு சாவக்காடன் பேசியபோது, படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் நடிகர் விஜய் சேதுபதியுடன் போட்டோ எடுத்துக்கொள்ளவும், அவரை ஃபர்ஸ்ட் லுக் வெளியிட கேட்டுக்கொள்ளவும் சந்திக்க விரும்பியதாகவும், ஆனால் அவரை சந்திக்க சென்று அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு ஆதங்கப்பட்டார்.
சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே. அன்புச்செல்வன் பேசியபோது, ”கேரளாவில் இருந்து இங்கு வந்து தமிழ்ப் படம் எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒரு படத்தையும் யாரும் தடை செய்வதற்கு இங்கு உரிமை இல்லை. அப்படி தடை செய்தால் நான் வேடிக்கை பார்க்க மாட்டேன். தக்க நடவடிக்கை எடுப்பேன். ஆர்ட் டைரக்டர் யூனியன் திருவள்ளூர் அருகே யோகிபாபு நடிக்கும் ஸ்கூல் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்றார்.
சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா பேசியபோது, ”திரைத் துறையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள் ஏராளம். அதை முதல்வர் ஸ்டாலின் அவர்களும் தொடர்கிறார். அந்த வகையில்தான் பூந்தமல்லி அருகில் திரைப்பட நகர் உருவாக்குவதற்கு 500 கோடி ஒதுக்கியுள்ளார். அமைச்சர் உதயநிதி அவர்களும் திரைப்படத்துறையில் இருந்து தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. நல்வழிகளை செய்யும் ஒரு ஊடகமாகும்” என்றார்.
இந்திய ஜனநாயக கட்சியின் துணைத் தலைவர் ஆனந்த முருகன், ”நான் பொதுவாக அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்வது வழக்கம். அன்புச்செல்வன் அவர்கள் கேட்டுக் கொள்வதால்தான் சமீபமாக சினிமா விழாக்களில் கலந்து கொள்கிறேன். இந்த படத்தின் பாடல்கள் நன்றாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் படம் எடுக்கத் துவங்கும்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள். படம் முடிந்தபின் முகம் வாடிப்போய் இருப்பார்கள். ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர் இப்போது, படத்தின் முதல் காட்சி எடுக்கும்போது இருப்பதைபோல் மகிழ்ச்சியாக இருக்கிறார். படம் நன்றாக வந்திருப்பதால்தான் அந்த மகிழ்ச்சி. மலையாளத்திலிருந்து தமிழில் படம் எடுத்துள்ளது பாராட்டுக்குரியது” என்றார்.