சதீஷ் என்கிற சாட்ஸ்ரெக்ஸ் மோட்டார் பைக்குகளை வைத்து வித்தியாசமான படமாக ‘ரேசர்’ என்ற படத்தை இயக்கி கவனம் ஈர்த்தார். அடுத்ததாக இப்போது கதை, திரைக்கதை, வசனம் எழுதி என்கவுன்டர் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து கேங்ஸ்டர் கதையை இயக்குகிறார்.
உண்மைச் சம்பவத்துடன் கற்பனையும் சேர்த்து அதிரடி ஆக்சனில் ஹாலிவுட் பாணியில் இந்த படம் உருவாகிறது. ரேசர் படத்தை தயாரித்த கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். விக்கி மேக் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் இசையமைக்கிறார்.
அகில் சந்தோஷ் நடிக்க கதாநாயகியாக பர்வீன் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் அருள்தாஸ், ஜெயக்குமார், சில்மிஷம் சிவா, சிவம், அருண் உதயன், குட்டி கோபி, பூவையார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
படத்தின் தொடக்க விழா புதுச்சேரியிலுள்ள அப்பா பைத்தியசாமி கோவிலில் நடந்தது. நிகழ்வில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு படப்பிடிப்பு பணிகளைத் துவங்கி வைத்தார். அதை தொடர்ந்து 50 ஏக்கருக்கு மேற்பட்ட அடர்ந்த காட்டுப்பகுதியில் படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.