விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ள ‘ரோமியோ’ படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் வரும் ரம்ஜான் பண்டிகை வெளியீடாக திரையரங்குகளுக்கு வரவுள்ளது. முன்னதாக படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் பேசியபோது, ”ஒரு கணவனாக காதலனாக ஒரு ஆணை பெண் எப்படி பார்க்க வேண்டும் என்பதுதான் கதை. அதற்கான இன்ஸ்பிரேஷன் என் அம்மாதான். இது வழக்கமான காதல் கதை கிடையாது. சக்சஸ்ஃபுல்லான மனிதன் தன் வாழ்வில் மிஸ் செய்யும் காதல்தான் ‘ரோமியோ’. பல சர்ப்ரைஸான விஷயங்கள் கதையில் இருக்கிறது. தன் வாழ்வில் வரும் பெண்ணை எப்படி அணுக வேண்டும் என சொல்லியிருக்கிறோம். ஹீரோயின் லீலாவுக்காக ஒரு வருஷம் தேடினோம். மிருணாளினி ஃபோட்டோ பார்த்துவிட்டு அவரிடம் பேசினோம். அவருக்கும் கதை பிடித்து விட்டது. விஜய் ஆண்டனி சார் எனக்கு ‘பிச்சைக்காரன்’ படத்தில் இயக்கம் கற்றுக் கொடுத்தார். அவருடைய நிஜ முகத்தை ஜாலியாக இதில் பார்க்கலாம். வாழ்க்கையில் உள்ள எல்லா எமோஷன்களும் படத்தில் இருக்கும். அறிவு – லீலாவை உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்” என்றார்.
விஜய் ஆண்டனி பேசியபோது, “இந்த மேடையே சந்தோஷமாக உள்ளது. விநாயக் போன்ற திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி. மிருணாளினி தன்மையான நல்ல பொண்ணு. படத்தை புரோமோட் பண்ண எங்களை பத்தி கிசுகிசு கிரியேட் பண்ணலாமா என யோசித்தோம். ஆனால், எதுவுமே வொர்க்கவுட் ஆகவில்லை. முதன் முறையாக ஒரு காதல் படத்தில் நடித்துள்ளேன். ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள், ஆண் சமூகம் எப்படி இதை பொறுத்துக் கொள்கிறது என்பதுதான் கதை. குடும்பத்தோடு நிச்சயம் படத்தைப் பார்க்கலாம்” என்றார்.
நடிகை மிருணாளினி ரவி, “இந்த படம் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். இந்த படத்தில் நான் முதல்முறையாக டப்பிங் செய்திருக்கிறேன். பர்சனலாக நான் என்னுடன் இந்தக் கதையை ரிலேட் செய்து கொண்டேன். தலைவாசல் விஜய் சார் எனக்கு ஸ்ட்ரிக்ட்டான அப்பாவாக நடித்துள்ளார்” என்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தயாரிப்பாளர் தனஞ்செயன், படத்தில் கதாநாயகிக்கு தந்தையாக நடித்துள்ள தலைவாசல் விஜய், இசையமைப்பாளர் பரத் தனசேகர், இணை இயக்குநர் வைத்தியநாதன், சவுண்ட் டிசைன் விஜய் ரத்னம், சவுண்ட் மிக்ஸிங் ரஹமதுல்லா, காஸ்ட்யூம் டிசைனர் ஷிமோனா ஸ்டாலின், ஸ்டண்ட் மாஸ்டர் முரளி, கோரியோகிராஃபர் அசார், எடிட்டர் விக்கி உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.