ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கியுள்ள படம் ‘ரெபல்.’
உண்மைச் சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்த படத்தில் கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 22-ம் தேதி திரைக்கு வரும் நிலையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் நிகேஷ் பேசியபோது, ”நான் கதை சொல்லப் போனபோது எனக்கு 24 வயது தான், ஆனால் ஞானவேல் ராஜா சார் என்னை நம்பி கதை கேட்டார். 10 நாள் ஷூட் செய்து, அவரிடம் காட்டினேன். அதன் பிறகு படம் முடியும் வரை, என்னிடம் கேள்வியே கேட்கவில்லை.
ஜீவி பிரகாஷ் அண்ணா என்னை நம்பி இந்தக்கதை கேட்டார், கேட்டவுடன் தமிழுக்கான கதையில் நான் நடிக்கிறேன் என்று வந்தார். இந்த மொத்தப்படமும் அவர் மீது தான் பயணிக்கிறது.
நாயகி மமிதா பைஜு, மிக ஆழமான அழுத்தமான கேரக்டர், ஆனால் அதைப் புரிந்து நடித்த தந்தார் அவருக்கு என் நன்றிகள். பா ரஞ்சித் அண்ணா என் படத்தின் பூஜைக்கு வந்தார், இப்போது இங்கு வாழ்த்த வந்துள்ளார், நன்றிகள். ஒவ்வொருவரும் அற்புதமாக நடித்துள்ளனர். அருண் மிக அற்புதமான ஒளிப்பதிவைத் தந்துள்ளார்” என்றார்.
ஜீவி பிரகாஷ் பேசியபோது, ”மிக நீண்ட வருடம் கழித்து ஸ்டூடியோ கிரீன் உடன் படம் செய்கிறேன், அவர் தான் டார்லிங் படத்தில் நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்தப்படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. தமிழ் பற்றிப் பேசும் கதை, இது என்னிடம் வந்தபோது சந்தோஷமாக இருந்தது, இயக்குநர் நிகேஷ் அவரது சொந்தக்காரரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதையை எடுத்து திரைப்படமாகச் செய்துள்ளார்.
மமிதா பைஜு மிக அழகாக இந்த ரோலைச் செய்துள்ளார். ஆதித்யா இந்தப்படத்தின் மையமே அவன் தான். அவனது கேரக்டர் சரியாக அமைந்ததால் தான், இந்தப்படமே சரியாக வந்துள்ளது. அட்டகாசமாகச் செய்துள்ளான்.
ஒரு குழுவாக எல்லோரும் விரும்பி உழைத்திருக்கும் படம். தமிழ் உரிமை பற்றிப் பேசும் அழுத்தமான படம் உங்கள் எல்லோருக்கும் இப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும்.
இங்கு எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் என் நன்றிகள். ரஞ்சித் சாருடன் பணியாற்றும், தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது. அவருடன் அவர் தயாரிப்பில் இன்னொரு படம் செய்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி” என்றார்.
இயக்குநர் பா ரஞ்சித் பேசியபோது, ”இந்த படத்தின் விஷுவல், டிரெய்லர், எடிட்டிங் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு பகுதியில், இரு மாநிலங்கள் கலக்கும் பகுதியில் அங்குள்ள பிரச்சனையைப் பேசும் பின்னணியில், இந்தக்கதையை செட் செய்துள்ளார்கள். வாழ்த்துக்கள். ஜீவியை எனக்கு தங்கலான் மூலமாகத் தான் தெரியும், எல்லோரும் அவரை நல்ல மனிதன் எனச் சொல்வார்கள், ஆனால் நேரில் பழகியபிறகு தான் தெரிந்தது, மிக மிக நல்ல மனது கொண்ட மனிதர். அவர் இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும்,
நிகேஷ் இந்த படத்தில் இருமொழி பிரச்சனையை கவனமுடன் பேசியிருப்பார் என்று நம்புகிறேன். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்றார்.