கதையம்சத்தால் பேசப்படக்கூடிய, வணிக ரீதியாக வெற்றி பெறக்கூடிய படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர் விஜய் ஆண்டனி. அந்த வகையில் அவர் நடித்து, வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளிவரவிருக்கும் படம் ‘ரத்தம்.’
‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ ஆகிய படங்களை இயக்கி, ரசிகர்களை சிரித்து மகிழ வைத்த சி.எஸ். அமுதன் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் ‘ரத்தம்’ படத்தை இயக்கியிருப்பதும், படத்தின் டீசர், டிரெய்லர் உள்ளிட்டவையும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான அனுபவம் கிடைக்கப்போவது உறுதியாகியிருக்கிறது.
இந்த நிலையில், விஜய் ஆண்டனி படம் பற்றி பேசியபோது, “சி.எஸ்.அமுதனின் திறமை குறித்து எனக்கு பல வருடங்களாகத் தெரியும். அவர் ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படங்கள் எடுப்பதில் பிரபலமானவர் என்றாலும், வெவ்வேறு ஜானர்களில் கதையை படமாக்குவதிலும் அவர் திறமையானவர்.
‘ரத்தம்’ படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது எனக்கு உடனே பிடித்துப் போனது மற்றும் அந்தக் கதையை காட்சிப்படுத்துவதும் மிகவும் எளிதாக இருந்தது. என் கரியரில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று நான் நம்பினேன். இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும். படத்தின் இறுதி வடிவத்தைப் பார்க்கும் போது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.
இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. முழு கதையும் அவர்களால் தான் நகரும். தீவிரமான அர்ப்பணிப்புடன் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் கூட படத்திற்கு வலு சேர்க்கும். படம் பார்த்து விட்டு ரசிகர்கள் திரையரங்குகளை விட்டு வெளியே வரும்போது அவர்களுக்கு 100% திருப்தியாக உணர்வார்கள்” என்றார்.