கருத்து சொல்வதை நோக்கமாக கொண்ட படங்களில் வரிசையில் புதுவரவாக ‘பூமர காத்து.’
பள்ளிப் படிப்பின்போது காதலித்த பெண்ணுடன் மணவாழ்வில் இணையமுடியாத நாயகன், படித்து முடித்து வேலை கிடைத்தபின் காதலித்த பெண்ணை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகிறான். அந்த குழந்தைகள் உணவுக்கு வழியில்லாமல் தவிக்கிற அளவுக்கு குடும்பத்தில் கஷ்டங்கள் சூழ்கிறது. நாயகனின் மனைவி ஒரு கட்டத்தில் விபரீத முடிவுக்குத் தயாராகிறாள்.
நாயகன் குடும்பம் சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டதன் காரணம் என்ன என்பதெல்லாம் திரைக்கதை… அந்த சூழ்நிலையிலிருந்து அவர்களால் மீண்டு வர முடிந்ததா இல்லையா? என்பது படத்தின் நிறைவு. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் ஞான ஆரோக்கிய ராஜா
பள்ளியில் படிக்கும்போது நாயகன் சக மாணவி மீது காதல் வயப்படுவதும், அந்த பெண் படிக்கிற வயதில் காதலிப்பதை தவறாக கருதுவதால் காதல் நிறைவேறாது போவதுமாக படத்தின் முன்பாதி கடந்து போகிறது. அந்த பள்ளிப் பருவத்தில் நாயகனான வருகிற சந்தோஷ் சரவணன், மாணவியாக வருகிற மனிஷா இருவரின் ஜோடிப் பொருத்தம் செம ஜோர்.
அந்த அத்தியாயத்தில் நாயகன் சந்தோஷ் சிகரெட் பிடிக்கிற, மது குடிக்கிற சக மாணவர்களை கண்டிப்பதும், மனிஷா தன்னுடன் படிக்கிற மாணவிக்கு நடக்கவிருக்கும் கல்யாணத்தை தடுத்து நிறுத்தி அந்த பெண்ணின் பெற்றோருக்கு அறிவுரை சொல்வதும் கவனம் ஈர்க்கும் சங்கதிகள்.
சந்தோஷ், மனிஷா படிக்கும் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியையாக மனோபாலா, தேவதர்ஷினி. அவர்களுக்கு ஒரு பிளாஷ்பேக். அதில் அவர்கள் பிளஸ் டூ மாணவ மாணவியாக வருவதும், காதலிப்பதும் லேசாக சிரிப்பு மூட்டுகின்றன.
பள்ளிப் பருவத்திலிருந்து 13 வருடங்கள் கடந்தபின் தொடங்கும் கதையில், நாயகன் நாயகியின் முகத்தை மட்டுமே பார்த்து மனதுக்குள் காதல் வளர்ப்பதும், பின்னர் அவளது முழு உருவத்தையும் பார்த்தபின் அதிர்ந்து பின் வாங்குவதுமாய் தொடர்கிற காட்சிகள் காட்சிகள் சிறியளவில் பரபரப்பை உருவாக்க,
ஹீரோயினுக்கு நேரும் விபத்து, குடும்பத்தின் வறுமை, வாடகை வீட்டில் உரிமையாளரின் கெடுபிடி அடாவடி, பிள்ளைகள் உணவின்றி வாடி வதங்குவது என நீள்கிற சம்பவங்கள் மனதை ரணமாக்குகின்றன. கொஞ்சம் உற்சாகமும் நிறைய வலிகளும் நிரம்பிய இந்த எபிசோடுகளில் நாயகன் விதுஷ் பாஸ்மார்க் வாங்குகிற அளவுக்கு பங்களிப்பு தர, நாயகி மீனா தன் பாவப்பட்ட நிலையை பிரதிபலிக்கும் நடிப்பால் பரிதாபத்தின் உச்சத்துக்கு நம்மை இழுத்துச் செல்ல முயற்சித்திருக்கிறார்.
சீரியஸான கதையில் சிங்கம் புலி, நெல்லை சிவா, முத்துக்காளை, போண்டா மணி, சூப்பர் குட் லெஷ்மணன் என சிலர் அவ்வப்போது எட்டிப் பார்த்து கலகலப்பூட்ட, ‘வெல்லக் கட்டி பேரழகி’, ‘அடிடா குடிடா’ என ரசிக்கும்படியான பாடல்களும் கலந்திருக்கின்றன.
படத்தின் உருவாக்கம் நாடகத்தனமாக இருந்தாலும், ‘படிக்கிற வயதில் காதலிக்காதீர்கள்’, ‘பிள்ளைகளை படிக்கிற வயதில் படிக்கவிடாமல் தடுத்து திருமணம் செய்துவைக்க நினைக்காதீர்கள்’, ‘பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வல்ல’ என்றெல்லாம் வழங்கியிருக்கும் அறிவுரை, சமூகத்துக்கு அவசியமானதாக இருப்பதால் ‘பூமர காத்து’ படக்குழுவுக்கு தாராளமாய் தரலாம் பாராட்டுப் பூங்கொத்து!
Rating 2.5/5