மாஸ் ஹீரோக்கள் இல்லை; ஃபேமஸான வில்லன்கள் இல்லை; பிரமாண்டமான பட்ஜெட் இல்லை. ஆனாலும் கவனம் ஈர்க்கும் விதத்தில் உருவாகியிருக்கிறாள் இந்த ‘பேச்சி.’
மூன்று இளைஞர்கள், இரண்டு இளம்பெண்கள் இணைந்து பரந்து விரிந்த அந்த காட்டை சுற்றிப் பார்ப்பது, வீடியோ எடுப்பது, மலையேறுவது என ஜாலியான சாகசப் பயணத்துக்கு திட்டமிடுகிறார்கள். தங்களுக்கு வழிகாட்டும் உதவிக்காக வனத்துறை ஊழியரான ஒரு இளைஞனை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்.
காட்டுக்குள் போன அவர்கள் வழிகாட்டியின் எச்சரிக்கையை மீறி ஆபத்தான பகுதியில் நுழைகிறார்கள். அந்த விநாடியிலிருந்து அவர்களில் ஒவ்வொருவராக ஏதோவொரு சக்தியால் தாக்கப்பட்டு காணாமல் போகிறார்கள்.
மிச்சமிருப்பவர்களிடம் அந்த வழிகாட்டி, ‘நடக்கும் விபரீதங்களுக்கு பேச்சியின் நரபலி வேட்டைதான் காரணம்’ என்று சொல்லி பயத்தை தூண்டுகிறான்… அவர்கள் அவன் சொன்னதை நம்பாமல் நடக்கும் சம்பவங்களுக்கு அவன் காரணமாக இருப்பானோ என்று நினைத்து சந்தேகப்படுகிறார்கள்.
பேச்சி, நரபலி என வழிகாட்டி சொன்னது உண்மையா? அல்லது வேறு ஏதும் சூழ்ச்சியா? இந்த கேள்விகளுக்கு பரபரப்பான திரைக்கதையில் பதில் சொல்கிறார் இயக்குநர் ராமச்சந்திரன்
சாகசப் பயணக் குழுவில் பேய் பிசாசு என எதையும் நம்பாமல் துணிச்சலாக நடந்துகொள்கிற காயத்ரியின் கொந்தளிப்பான நடிப்பு, அவருக்கு இணையான துணிச்சலுடன் களமாடுகிற பிரித்தி நெடுமாறனின் ஆத்திர ஆவேச வெளிப்பாடு, உடனிருக்கிற தேவ், ஜனா, மகேஷ்வரன் மூவரும் பயத்தையும் பதற்றத்தையும் பரிமாறுகிற விதம் காட்சிகள் வேகமாக நகரும் உணர்வைத் தருகின்றன.
தான் எதை சொன்னாலும் கேட்டுக் கொள்ளாமல் மனம் போன போக்கில் நடந்து கொள்பவர்களிடம் மாட்டிக் கொண்டு அல்லல்படுகிற பால சரவணனின் பாத்திரமறிந்த நடிப்பும், திகில் படங்களுக்கே உரிய பயத்தை தூண்டும் விதத்திலான ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை, மிரட்டல் காட்சிகளை கச்சிதமாக கோர்த்திருக்கிற எடிட்டிங் அனைத்தும் படத்தின் பலம்.
கிளைமாக்ஸ் டிவிஸ்டும் காயத்ரியின் வெறித்தன அவதாரமும் எதிர்பாராத சங்கதிகள். அவை அதிர்ச்சிக் கதவை திறந்து விடும் சாவிகள்.
பேய், பேயை அடக்கும் சாமியார், நரபலி, காடு என்கிற கதைக்களம் பழகியதுதான் என்றாலும், திரைக்கதையில் இருக்கிற விறுவிறுப்பால் பேச்சிக்கு கிடைத்திருக்கிறது நல்ல ரீச்!
Rating 3.5 / 5