நம்மூர் பேய்ப் படங்களுக்கெல்லாம் பெரும்பாலும் ஒரே விதமான டெம்ப்ளேட் கதைதான். பேயாக திரிபவர்கள் சில கேடு கெட்டவர்களால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப் பட்டிருப்பார்கள். இறந்துபோன அவர்கள் பேயாக வந்து, தங்களைக் கொன்றவர்களை பல மடங்கு துன்புறுத்தி பழி தீர்ப்பார்கள். அந்த பழி வாங்கலுக்கு பயன்படுத்த, உயிருடனிருக்கும் நல்லவர்களில் யாரையேனும் தேர்ந்தெடுத்து அவர்களின் உடலுக்குள் புகுந்து கொள்வார்கள். காலங்காலமாக பார்த்து பழகிய அந்த வழக்கத்திலிருந்து மாறாத இந்த ‘பார்க்’, தனக்கான தனித்துவமாக கதாநாயகன் மீதும் கதாநாயகி மீதும் ஒரே நேரத்தில் ஆவியை ஏற்றிவிட்டிருக்கிறது.
பல ஜென்ம பந்தம் போல் அடிக்கடி தற்செயலாக சந்திக்கும் அந்த இளைஞனும் இளம் பெண்ணும், காதலர்களாகி ஜாலியாக பொழுதைக் கழிக்கிறார்கள். ஒரு நாள், சில வெறிநாய் குணமுள்ளவர்கள் துரத்தியதால் அந்த ஊரில் அமானுஷ்ய சக்தியின் பிடியிலிருக்கிற ‘ஜாலி பார்க்’கில் தாவிக் குதிக்கிறார்கள். அந்த சந்தர்ப்பத்தில், அங்கிருக்கும் அமானுஷ்ய சக்திகள் அவர்களின் உடலில் அப்லோடாகிவிட அதன் பிறகு நடப்பதெல்லாம் வழக்கமான பழி வாங்கும் படலங்கள்…
சடலங்களாவது யார் யார்? அவர்கள் செய்த சதி என்னென்ன? என்பதெல்லாம் அடுத்தடுத்து விரிகிற திரைக்கதை. இயக்கம் இ கே முருகன்
அளவெடுத்துச் தைத்த சட்டை என்பது போல் ஜோடியாக பார்க்க அத்தனை பொருத்தமாக இருக்கிறார்கள் தமன் குமாரும் ஸ்வேதா டோரத்தியும். காதலர்களாக பொழுதைக் கழிக்கும்போது முழுமையான உற்சாகத்தில் மிதப்பவர்கள் ஆவியின் ஆக்கிரமிப்புக்குள் வந்தபின், அயோக்கியர்களை ஏறிமிதிக்கும் எமனாகி தங்களால் முடிந்தவரை மிரட்டியிருக்கிறார்கள்.
அதிர்ஷ்டப் போட்டியில் தமனுக்கு ஸ்கூட்டர் கிடைப்பதும், ஸ்வேதாவுக்கு பைக் கிடைப்பதும், அதை அவர்கள் மாற்றிக் கொள்வதும், பாடல்களில் வண்ணமயமான உடைகளில் அசைந்தாடுவதும் ரசிக்க வைக்கின்றன.
கற்பழிப்பு, கொலை என சட்ட விரோதச் செயல்களை அமைச்சரின் மகன் என்ற திமிரோடு செய்கிற யோகிராமின் வில்லத்தனம் பரவாயில்லை ரகம். பெண் போலீஸிடம் அத்துமீறும்போது ‘அடடே’ என்றிருக்கிறது அவரது அடாவடி அட்டகாசம்.
காமெடிக்கு பிளாக் பாண்டி. தமனுடன் சேர்ந்து டிடிஎச் கனெக்சன் கொடுக்கப் போகும்போதெல்லாம் ஏழரைச் சனி எதிரில் நிற்க இருவரும் படும்பாடு கண்டிப்பாக கலகலப்பூட்டும். இருவருமாக சேர்ந்து ‘அந்த’ மாதிரி பெண்ணுடன் கனென்சன் கொடுக்க கண்டெய்னருக்குள் போய்வருவதும் அந்த சந்தர்ப்பத்து வசனங்களும் கிளுகிளுப்பூட்டும்.
காதல் கடலில் மூழ்கி, கல்யாணக் கரையில் ஒதுங்க நினைத்து யோகிராம் கும்பலால் சீரழியும் ஜோடி மனதில் ஓரத்தில் நிற்பார்கள்.
திகில், திரில் என படபடத்து தடதடக்கும் கதைக்கு ஏற்ற பின்னணி இசையைத் தந்திருக்கும் ஹமாரா, பாடல்களை மனம் மயக்கும் மெல்லிசைக்குள் கைது செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவில் பாண்டியன் குப்பனின் மெனக்கெடல் தெரிகிறது.
வழக்கமான ஹாரர் படங்களின் வரிசையில் வந்து நிற்கிற மற்றுமொரு படம்தான் என்றாலும், திரைக்கதையிலிருக்கிற சின்னச் சின்ன திருப்பங்கள், சுவாரஸ்யங்கள் ‘பார்க்’கை, பார்க்கலாம் என்று சொல்ல வைக்கின்றன.