துரைராசு சாமானிய மனிதன், எளிய விவசாயி. மனைவியையும் தான் வளர்க்கும் ஆட்டையும் தனது விவசாய நிலத்தையும் உயிருக்கு உயிராக நேசிப்பவர். அவரது ஆடு அந்த பகுதியின் மணல் மாபியாவின் லாரியில் அடிபட்டுச் செத்துப் போக, துரைராசு அதற்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தை நாட, மணல் மாபியாவால் அவரது உயிருக்கு ஆபத்து. அவருக்கு பாதுகாப்பாக நியமிக்கப்படும் கான்ஸ்டபிளின் உயிருக்கும் ஆபத்து.
இந்த நிலையில் சட்டத்தாலும், துரைராசு வணங்கும் பாண்டிமுனியாலும் என்ன செய்ய முடிந்தது என்பது ஸ்க்ரீன்பிளே…
தனது வயதுக்கும், உடலின் தளர்வுக்கும், இயல்பான கேலி கிண்டல் பேச்சுக்கும் ஏற்ற கேரக்டர் கிடைக்க சுவாரஸ்யமான உடல்மொழியில் துரைராசுவாக புகுந்து விளையாடியிருக்கிறார் கங்கை அமரன்.
அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட கான்ஸ்டபிளாக (நடிகர் திலகம் சிவாஜியின் பேரன்) தர்சன், நினைத்த எதையும் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகி, நம்பிக்கைத் துரோகியாகி வேதனைப் படுகிற கதாபாத்திரத்தை ஒகே ரக நடிப்பால் தாங்கிப் பிடிக்கிறார்.
இயலாமையால், விரக்தியால் துவண்டு போகும் கணவனின் மனதுக்கு தெம்பு தரும் வேலையை தர்சனின் மனைவியாக வருகிற ஸ்ரீதா ராவ் சரியாகச் செய்திருக்கிறார்.
ஜட்ஜாக வருகிற ஜார்ஜ் மரியானின் நடிப்புக்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது.
கங்கை அமரனுக்கு மனைவியாக ரோஜாவின் அனுபவ நடிப்பு, ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட் கூட்டணியின் வில்லத்தனம் படத்துக்கு பலம். பிக்பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட மற்றவர்களுக்கும் முக்கியத்துவமிருக்கிறது.
இளையராஜா இசையில் பாடல்கள் உற்சாகமூட்ட, பின்னணி இசை நிறைவு. கதைக்களத்தின் தன்மை மாறாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஏ எம் எட்வின் சகே.
ஆட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு கோர்ட்டுக்கு போகிற எளிய மனிதனின் நிலைமை என்னவாகிறது என்கிற சிறிய கதையை எடுத்துக் கொண்டு மணல் மாபியாவின் அராஜகம், ரவுடியிஸம் அது இதுவென திரைக்கதைக்கு பரபரப்பு கூட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன். கதை ஒரு கட்டத்துக்கு மேல் மனம்போன போக்கில் பயணிப்பதால் அந்த பரபரப்பு ஆடியன்ஸ் மத்தியில் தாக்கத்தை உருவாக்கத் தவறுகிறது.
Rating 3 / 5 

