மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸும் நியூட்டன் சினிமாவும் இணையும் ‘பாரடைஸ்’ என்கிற மலையாளத் திரைப்படத்தின் சர்வதேச பிரிமீயர் தென்கொரியாவின் பிரசித்தி பெற்ற பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் அக்டோபர் 7; 2023 அன்று திரையிடப்படுகிறது.
படத்தின் முக்கிய நடிகர்களும் படக்குழுவினரும் இதில் பங்கு பெறுகிறார்கள்.
இந்த விழாவின் முதன்மை விருதான கிம் ஜெசோக்’ விருதிற்கும் பாரடைஸ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற இயக்குநரும் பல சர்வதேச விருதுகளைப் பெற்றவருமான பிரசன்னா விதானகே இப்படத்தை இயக்கியிருக்கிறார். 2022-ல் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியும் அதைத் தொடர்ந்து எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடும், விலை உயர்வும் இலங்கையில் நாடுதழுவிய போராட்டம் வெடிப்பதற்குக் காரணமாக இருந்தது. இச்சமயத்தில் தங்களுடைய ஐந்தாம் திருமண விழா கொண்டாட அங்கு செல்லும் மலையாளிகளான வெப் சீரிஸ் தயாரிப்பாளரான, காணொளி பதிவாளர் (vlogger) மற்றும் அவரது மனைவி ஆகியோர் அங்கே எதிர்கொள்ளும் எதிர்பாராத நிகழ்வுகளையும், விசித்திரமான அனுபவங்களையும் காட்சிப்படுத்தும்’ ‘பாரடைஸ்’ ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் திரைப்படமாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.
பிரச்சினை வரும்போது தான் மனிதர்களின் உண்மை முகம் தெரிகிறது என்பதைக் கூறும் இப்படம், இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளையும் அங்குள்ள மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலையையும் பேசுகிறது. அதோடு இராமாயணத்தில் இடம் பெற்றுள்ள முக்கியமான சம்பவங்களையும் இடங்களையும் கதையோட்டத்தில் காணலாம் என்கின்றனர், இப்படத்தின் தயாரிப்பாளர்களான ஆன்டோ சிட்டிலப்பள்ளியும், ஸனிதா சிட்டிலப்பள்ளியும்.
மலையாளத்தில் பல முக்கிய படங்களில் நடித்த ரோஷன் மேத்யூவும், தர்ஷனா ராஜேந்திரனும் இப்படத்தில் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை இந்தியாவின் முக்கியமான ஒளிப்பதிவாளரான ராஜீவ் ரவியும், படத்தொகுப்பை ஶ்ரீகர் பிரசாத்தும்,
ஒலிக்கலவையை தபஸ் நாயக்கும், இசையை கேயும் கையாண்டுள்ளனர்.
பாரடைஸ் உன்னதமான உணர்வுகளின் கோர்வையோடு, சினிமாவின் அழகியலை அருமையாக கையாண்டிருக்கும் ஒரு தலைசிறந்த இயக்குனரால் எடுக்கப்பட்ட படமாகும். அதோடு குறிப்பிடத்தக்க நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் சேர்ந்து நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள படமுமாகும். இப்படத்தை வழங்குவதில் மெட்ராஸ் டாக்கீஸ் பெருமை கொள்கிறது என்றார் அந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான சிவா ஆனந்த்.