கல்லூரி மாணவியொருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கு, தான் உடற்கல்வி ஆசிரியராக (பி.டி.சார்) பணிபுரியும் கல்வி நிறுவனத்தின் சேர்மன்தான் காரணம் என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு போடுகிறார் கனகவேல்.
பணபலமும் அதிகார பலமும் ஊர் மக்களின் செல்வாக்கும் கொண்ட சேர்மனை எளிய மனிதனான கனகவேல் எதிர்க்கும்போது அவர் சந்திக்கும் சவால்கள் பரபரப்பான காட்சிகளாக கடந்தோட வழக்கின் முடிவு என்னவானது? என்பதோடு நிறைவடைகிறது ‘பி.டி.சார்.’
தனக்குத் தெரிந்த பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான தகவல் தெரிந்ததும், கொதிப்படைந்து கல்லூரி சேர்மனை அசுர பலத்துடன் தாக்குவது, சேர்மனுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் உறுதியாக நிற்பது, அதற்காக புத்திசாலித்தனமாக ஸ்கெட்ச் போடுவது என சுறுசுறுப்பு காட்டியிருக்கிறார் உடற்கல்வி ஆசிரியராக வருகிற ஹிப் ஹாப் ஆதி. சக ஆசிரியருடன் காதலாகி ஆடிப் பாடவும் செய்திருக்கிறார்.
சில இளைஞர்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி உடலில் ரணப்படுவது, பாலியல் சீண்டல் வீடியோ வெளியாகி அக்க பக்கத்தினரின் அவமான அவதூறுப் பேச்சுக்களால் மனதளவில் ரணப்படுவது என கதையின் பிரதான பாத்திரத்தை ஏற்றிருக்கும் அனிகா, அந்த கனமான பாத்திரத்துக்குப் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்.
கல்வி நிறுவனத்தின் சேர்மனாக வருகிற தியாகராஜன், அயோக்கியத்தனத்தின் மொத்த உருவமாக வெளிப்பட்டு கெத்து காட்டியிருக்கிறார்.
ஹீரோவை காதலிக்கிற வழக்கமான ஹீரோயினாக கடமையாற்றியிருக்கிறார் அழகும் அமைதியும் நிரம்பிய காஷ்மிரா பர்தேசி.
இயக்குநர் பாக்யராஜ், இளைய திலகம் பிரபு, இளவரசு, வினோதினி, பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி, முனீஷ்காந்த், நக்கலைட்ஸ் பிரசன்னா என மற்ற நடிகர்கள் தங்களின் பங்களிப்பில் குறைவைக்கவில்லை.
ஹி ஹாப் ஆதியின் இசையில் பாடல்களில் புத்துணர்ச்சியும், பின்னணி இசையில் கதைக்கேற்ற விறுவிறுப்பும் கலந்திருக்கிறது.
பாலியல் சீண்டல், பாலியல் வன்முறை என தொடர்ச்சியாக பெண்களும் சிறுமிகளும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வரும் சூழ்நிலையில், அப்படியான சம்பவத்தை மையப்படுத்திய படைப்பை முடிந்தவரை நேர்த்தியாக தந்திருப்பதற்காகவும், கிளைமாக்ஸில் வைத்திருக்கும் திருப்பத்துக்காகவும், பாலியல் சீண்டலால் பாதிக்கப்படுகிறவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என சரியான அறிவுரை வழங்கியிருப்பதற்காகவும் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலனை பாராட்டலாம்.
பி.டி.சார், நடத்திய பாடம் ஜோர்!