தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிப்பில், மாணிக்க வித்யா இயக்கத்தில், ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள ‘பித்தல மாத்தி’ திரைப்படம் வரும் ஜூன் 14-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. முன்னதாக படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் மாணிக்க வித்யா, தயாரிப்பாளர் சரவணன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் ஆர்வி உதயகுமார், நடிகர் காதல் சுகுமார், கலை இயக்குநர் வீரசமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் சரவணன் பேசியபோது, ”ஒரு படம் என்பது குழந்தை மாதிரி. தாய் இயக்குநர் என்றால் தயாரிப்பாளர்தான் தகப்பன். அந்த தகப்பனுக்கான பங்களிப்பை செய்துள்ளேன்” என்றார்.
இயக்குநர் மாணிக்க வித்யா பேசியபோது, ”நாம் எல்லோரும் வெளியே ஒரு தோற்றம் உள்ளுக்குள் வேறு தோற்றத்தில் இருப்போம். அதுதான் இந்த கதையிலும் இருக்கிறது. படத்தில் வில்லி கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும். படத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.
காதல் சுகுமார் பேசும்போது, ”உமாபதி ராமையா, ஐஸ்வர்யா இருவருக்கும் வாழ்த்துகள். திருமண வரவேற்பு அன்றே அவரது படம் வெளியாவது மிகப் பெரிய ஆசிர்வாதம்” என்றார்.
இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசியபோது, ”உமாபதி ராமையா வாழ்வில் திருமணத்திற்கு பிறகு பெரிய மாற்றம் வரும் என நினைக்கிறேன். எனக்கும் திருமணத்திற்கு பிறகு தான் முதல் படம் வெளியானது. பித்தல மாத்தி படத்தின் டிரெய்லர் பாடல்கள் பார்த்தோம். இயக்குனர் மாணிக்க வித்யா ரொம்ப பிரமாதமாக செய்துள்ளார். படத்தின் தலைப்பு வித்தியாசமாகவும் அழகாகவும் தமிழ் தலைப்பாகவும் உள்ளது. உமாபதி அருமையாக நடித்துள்ளார். எதார்த்த படங்கள் இன்றைய காலகட்டத்தில் மக்களால் மிகவும் பாராட்டப்படுகிறது. பித்தலை மாத்தி படமும் நிச்சயம் டிரெண்ட் மாத்தி படமாக இருக்கும்” என்றார்.
கே.ராஜன் பேசியபோது, ”இந்த படத்திற்கு தமிழில் தலைப்பு வைத்திருப்பதற்கு பாராட்டுக்கள். முன்பு தமிழில் தலைப்பு வைத்த படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் பரிசீலனை செய்து வருகின்றனர். டிக்கெட் கட்டணம் குறைந்தால் தியேட்டருக்கு கூட்டம் வரும். டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் மனு கொடுத்துள்ளேன். கவனிப்பதாக சொல்லியுள்ளனர்” என்றார்.
கலை இயக்குனர் வீர சமர் பேசியதாவது, ”இப்படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். இதில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் மாணிக்க வித்யா தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இயக்குநராக வருவார்.சமூகத்திற்கு தீங்கு விளைவிக்காத கதையை எடுத்துள்ளனர்” என்றார்.
காமெடி கலந்த காதல் சப்ஜெக்டில் உருவான இந்த படத்தில், உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.