கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் படம் பனை.’ நலிந்து வரும் பனைமரத் தொழில் பற்றியும் தொழிலாளர்களைப் பற்றியும் பேசும் இந்த படத்தை தயாரித்திருக்கும் ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ்’ எம்.ராஜேந்திரன் படத்தின் கதையையும் எழுதியிருக்கிறார்.
ஹரிஷ் பிரபாகரன் நாயகனாக நடிக்க, மேக்னா நாயகியாக நடிக்க வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, டி.எஸ்.ஆர், ஜி.பி.முத்து, தயாரிப்பாளரும் கதாசிரியருமான எம்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கவிப்பேரரசு தலைமையேற்க, இயக்குநர்கள் பேரரசு, அரவிந்தராஜ், கவிஞர் சொற்கோ, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கவிப்பேரரசு வைரமுத்து பேசியபோது, “இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்ன இயக்குநர், படத்திற்கு ‘விதை’ என்று தலைப்பு வைத்திருக்கிறேன், என்று சொன்னார். நான் சொன்னேன், விதை நல்ல பெயர் தான். ஆனால், நீங்கள் சொல்ல விரும்புகிற கதையை விட்டு விதை தள்ளியிருக்கிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த துடிப்பும் தலைப்புக்குள் வர வேண்டும் என்றால் ‘பனை’ என்று பெயர் வையுங்கள், என்று சொன்னேன். அவர் உடனே ஏற்றுக்கொண்டு, விதையை விட பனை எனக்கு பக்கத்தில் இருக்குது ஐயா என்று சொன்னார், வாழ்க என்று சொன்னேன்.
இந்த படத்தில் ஒரு பாட்டு எழுதியிருக்கிறேன், “ஒத்த பனமரா நான் ஒத்தையிலே நிற்கிறேனே, புத்திகெட்ட அத்த மகன் புலம்பவிட்டு போனானே…” இது ஒரு பெண்ணின் ஏக்கம். இதில், ஒத்த பனமரமா என்று வார்த்தை முதல் வரியில் வைத்தததில் ஒரு விடுகதை இருக்கு, இதற்கு கடைசி வரியில் விடை சொல்லியிருக்கிறேன். ஒருதலையா காதலிச்சா வெற்றி பெற முடியாது, அதுபோல் ஒத்த பனமரத்தில் ஊஞ்சல் கட்ட முடியாது. அதனால், இரண்டு ஒத்த பனமரத்தில் தான் ஊஞ்சல் கட்ட முடியும், எனவே நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்தால் தான் காதல் ஜெயிக்கும், என்று சொல்லியிருக்கிறேன். இப்படிப்பட்ட விசயங்களை எல்லாம் நீங்கள் புரிந்துகொள்ள பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த பாடல்களில் நான் முயற்சி செய்திருக்கிறேன்.
இன்று ஒரு படம் தயாரிப்பது எளிது, பணம் இருந்தால், நல்ல கதை இருந்தால் படம் தயாரித்து விட முடியும். ஆனால், ஒரு படத்தை வெளியிடுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பணம் இருந்தால் கூட படத்தை வெளியிட்டு விட முடியாது. திரையரங்கங்கள், காலம், சூழல் என அனைத்தும் வேண்டும். இவை அனைத்தும் இருந்தாலும் கூட படத்தை பார்ப்பதற்கு தமிழர்கள் நல்ல மனநிலையோடு இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழல்களை நீங்கள் உருவாக்கிகொண்டு இந்த படத்தை வெளியிட வேண்டும். பனை வெற்றி பெற்றால் சிறு தயாரிப்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
எந்த மரமும் புயலில் சாய்ந்துவிடும், எந்த மரமும் வெயிலில் காய்ந்துவிடும். ஆனால், எந்த புயலுக்கும் சாயாத மரம், எந்த வெயிலுக்கும் காயாத மரம் பனை. அந்த பனை போல் இந்த பனை படக்குழு வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்” என்றார்.
நிகழ்வில் தயாரிப்பாளர் எம்.ராஜேந்திரன், நாயகி மேக்னா, நாயகன் ஹரிஷ் பிரபாகரன், இயக்குநர் அரவிந்தராஜ், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோரும் பேசினார்கள்.