பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை மையப்படுத்தி வெளிவருகிற படங்களின் வரிசையில் இணைகிற ‘படிக்காத பக்கங்கள்.’
பத்திரிகையாளர் என சொல்லிக் கொண்டு நடிகை ஸ்ரீஜாவை சந்திக்கும் அந்த நபர், அவரை பாலியல் உறவுக்கு அழைக்கிறார். கொதித்துக் கொந்தளிக்கும் நடிகை அவரை அடித்து வீழ்த்துகிறார். அந்த நபர் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகிற எம்.எல்.எ.வின் கையாள் என்பதும், அவர்களால் ஏகப்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதெல்லாம் அடுத்தடுத்து விரிகிற மனதை ரணப்படுத்தும் காட்சிகள்…
அந்த கேடுகெட்ட குற்றவாளிகளை தண்டிக்க நடிகை களமிறங்குவதும் அதில் அவர் சந்திக்கும் சவால்களையும் அவரது முயற்சிக்கு கிடைக்கும் பலன்களையும் திரைக்கதையாக்கி படத்தை இயக்கியிருக்கிறார் செல்வம் மாதப்பன்.
நடிகை ஸ்ரீஜாவாக வருகிற யாஷிகா ஆனந்தின் அதிரடி ஆக்சனும், இளமையை பரிமாறும் கவர்ச்சியும் கவர்கிறது. யாஷிகாவுக்கு தங்கையாக வருகிற தர்ஷினியின் அழகு மனதைக் கவர, தன்னைக் காதலித்த இளைஞனால் அவர் பாலியல் வன்முறைக்கு ஆளாகி பலியாவது மனம் கலங்க வைக்கிறது.
எம்.எல்.ஏ.வின் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருக்கிற முத்துக்குமாரின் வில்லத்தனத்தில் மிதமான மிரட்டலை பார்க்க முடிகிறது. மிகச்சில காட்சிகளில் போலீஸ் ஆஃபீசராக வந்து கடமையாற்றிப் போகிறார் பிரஜன்.
ஜெஸி கிப்டின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்க, தகுந்த தருணத்தில் வந்து போகிறது வைரமுத்துவின் வரிகளைச் சுமந்த ‘சரக்கு அதில் என்ன இருக்கு’ என்ற பாடல். அந்த பாடல் காட்சியின் குத்தாட்டம் இளைஞர்களுக்கான ஹாட்டான ட்ரீட்டு.
ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் கதையோட்டத்தை பலப்படுத்தியிருக்கின்றன.
நாட்டு நடப்பை, சமூக அவலத்தை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருப்பதற்காக படக்குழுவை பாராட்டலாம்.
படிக்காத பக்கங்கள் – புரட்டப்புரட்ட அதிர வைக்கும் அத்தியாயங்கள்!
Rating 2.5/5