ஓட்டுக்குப் பணம் பெறுவது எத்தகைய இழிசெயல் என்பதைச் சொல்லும் விதத்தில் உருவாகியிருக்கும் விழிப்புணர்வுப் பாடல் ‘பொதுநலவாதி.’
அவனியாபுரம் மாசாணம் எழுதி, இயக்கி தயாரிக்க, இசைத்தமிழன் ரியாஸ் காதிரி இசையில், அந்தோணிதாசன் குரலில் உருவாகியிருக்கும் இந்த பாடலில் பாண்டி கமல், விஜய் சத்யா, ஹலோ கந்தசாமி, ரியாஸ் காதிரி ஆகியோர் நடித்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் எங்கும் பணம் புழங்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் இன்று ஓட்டுக்குப் பணம் வாங்கினால் நாளை அவர்கள் வாழ்வு மட்டுமல்லாது, நாட்டின் எதிர்காலமே எப்படிப் பாதிக்கப்படும் என்பதை, அழுத்தமாகச் சொல்லும் இந்த பாடலின் வெளியீட்டு விழா சென்னையில் 30.3.2024 அன்று நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் அவனியாபுரம் மாசாணம் பேசியபோது, ”பொது நலவாதி அதாவது யானையின் வலு அதற்குத் தெரியாது. பொதுவில் 100 கோடிக்குப் படம் செய்து விடலாம் ஆனால் அதன் மதிப்பு குறைவு தான். ஆனால் இங்கு கூடியிருக்கும் கூட்டத்தின் மதிப்பு அதிகம் அது போல் ஓட்டுக்கு இருக்கும் மதிப்பு மக்களுக்குத் தெரியவில்லை. ஓட்டின் மதிப்பு அறிந்து அதனை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
பாடகர் அந்தோணிதாசன் பேசியபோது, ”மேடையை அலங்கரிக்கும் மூத்தவர்களுக்கு நாட்டுப்புற கலைஞனாக என் வணக்கம். இரண்டு பேரின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிவிழா தான் இது. மாசாணம், ரியாஸ் காரி இருவருடனும் இரண்டு மாதங்களாக இப்பாடலுக்காகச் சேர்ந்து உழைத்துள்ளேன். ரியாஸ் அண்ணன் பெரிய திறமைசாலி, பாடுவார், பாடல் எழுதுவார், மதுரையில் ஒரு ஸ்டுடியோ வைத்துள்ளார். திரைத்துறையில் ஜெயிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார் அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். மாசாணம் தன் சொந்தப்பணத்தைப் போட்டு அரசாங்கம் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். பாடலும் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது. ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள், ஓட்டை மதித்து பயன்படுத்துங்கள்” என்றார்.
திரைப்படத் தயாரிப்பாளர் வி சி குகநாதன் பேசியபோது, ”அரசியல்வாதிகள் மக்களுக்குப் பணம் லஞ்சம் கொடுக்க, ஊழல் செய்கிறார்கள், பணம் சம்பாதிக்கிறார்கள். இதைத்தான் இந்தப்பாடல் சொல்கிறது. இதை அரசாங்கம் அல்லவா வெளியிட வேண்டும் ஆனால் வெளியிட மாட்டார்கள். இன்னும் அரசியலில் நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் ஜெயிக்க வேண்டுமெனில் நாம் ஓட்டுக்குப் பணம் வாங்க மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகத்தான் எல்லாம் போய்க்கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் மக்கள்தான்” என்றார்.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் நிறுவனர் முனைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் பேசியபோது, ”மிக முக்கியமான இடத்திற்கு நாம் வந்துள்ளோம் என்ற உணர்வு வருகிறது. ஓட்டுக்குக் காசு என்பது கேன்சர் மாதிரி. 25 வருடம் முன்பு ஓட்டுக்குக் காசு வாங்கியதாக ஞாபகம் இல்லை, இது எப்போது மாறியது எனத் தெரியவில்லை. நாம் ஓட்டை விற்று விட்டால், அரசைக் கேள்வியே கேட்க முடியாது. அந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். நாம் என்ன தான் சொன்னாலும் எல்லோர் வீட்டிலும் ஓட்டுக்குப் பணம் வாங்கும் பழக்கம் அதிகரிக்கிறது. அதை மாற்ற வேண்டும். அதற்கான விழிப்புணர்வாக இப்பாடலை உருவாக்கியுள்ளார்கள். நிறைய நல்ல விசயங்கள் மதுரைக்காரர்களிடமிருந்து தான் வரும், எதையும் எதிர்பார்க்காமல் செய்வார்கள், அந்த நோக்கில் பொது நலத்துடன் இப்பாடலை உருவாக்கியுள்ளனர். பாடல் மிக அழகாக அமைந்துள்ளது.
எல்லோரும் கேட்கும் வண்ணம் எடிட்டிங், ஒலிப்பதிவு என எல்லாம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. பாடலில் கடவுளே இறங்கி வந்தாலும் காசு கொடுக்காமல் ஜெயிக்க முடியாது எனச் சொல்கிறார்கள், எவ்வளவு கொடுமையான உண்மை. எங்கள் குழு மூலம் இப்பாடலை 10 லட்சம் மக்களுக்கு எடுத்துச் செல்வோம். பாடல் உருவாக்கிய குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என்றார்.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ். இசையமைப்பாளர் ரியாஸ் காதிரி, திரைப்பட மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.
பாடல் உருவாக்கக் குழு:
எழுத்து , இயக்கம், தயாரிப்பு – மாசாணம்
இசை, எடிட்டிங் – ரியாஸ் காதிரி
பாடகர் – அந்தோணி தாசன்
ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி
மக்கள் தொடர்பு – செல்வரகு