இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் தனியிசை பாடல்கள், தமிழ் திரைப்பட பாடல்கள் மூலமாக உலகெங்குமுள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளார். தற்போது ‘மாமா குட்டிமா’ என்ற ஆல்பம் பாடலை எழுதியுள்ளார். அதன் புரோமோ இப்போது வெளியாகியுள்ளது.
ராப் பிரசாத் இயக்கியுள்ள இந்த அல்பம் பாடலின் புரோமோவினை நடிகர் ஜெய் இன்று வெளியிட்டார்.
லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான டாக்டர் மாலாகுமார் தனது மாலாகுமார் படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடலுக்கு, சமீபத்தில் தேசிய விருது பெற்ற ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்த உற்சாகமிக்க பாடலை அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான தேவா தனது காந்த குரலில், பிரத்யேக ஸ்டைலில் பாடியுள்ளார்.
இது பற்றி பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் பேசும்போது, காதலர்கள் கொண்டாடப்போகும் கானா பாடலின் புரோமோ இந்த காதலர் தினத்தில் வெளியாவது மகிழ்வை தருகிறது. மிகச்சிறிய வயதில் இருந்தே தேவா சாரின்
தீவிர ரசிகன் நான். அவர் பாடிய பாடல்களை கேசட்டில் போட்டுக் கேட்டு கொண்டாடிய காலம் ஒன்றிருந்தது. இப்போது அவர் எனது பாடலை பாடுகின்றார். இது நான் பெற்ற பாக்கியம். மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு தேவாவின் சாரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் பாடலாக நிச்சயம் இ்ப்பாடல் இருக்கும்.ஸ்ரீகாந்த் தேவா அவர்கள் மிகவும் ஜனரஞ்சகமாக இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்” என்றார்.
விஜய் ஆண்டனி நடித்த’ நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவிஞர் பொத்துவில்
அஸ்மின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’, அஜித் குமார் நடித்த ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்களுக்கு எழுதிய புரோமோ பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
‘முத்து முத்து கருவாயா’, ‘தாகம்தீர வானே இடிந்ததம்மா,’ ‘சண்டாளனே’, ‘கண்ணத்தொறந்ததும் சாமி’ ஆகியவை அஸ்மின் எழுதிய குறிப்பிடத்தக்க பாடல்களாகும். மேலும், சமீபத்தில் இலங்கையில் இருந்த வெளியாகி உலகெங்கும் டிரெண்ட் ஆன ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்… பொய் பொய்யாய் சொல்லி ஏமாத்தினது போதும்’ பாடலும் இவர் எழுதியது தான்.
‘முத்து முத்து கருவாயா’ மூலம் ஏற்கனவே வெற்றிப் பாடலைக் கொடுத்துள்ள ஸ்ரீகாந்த் தேவா-அஸ்மின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.